அக்கி அம்மை (ஷிங்கல்ஸ்) தடுப்பூசி மானியங்களுக்குத் தகுதிபெறாதவர்களும் தடுப்பூசியைக் குறைந்த விலையில் ‘சாஸ்’ பொது மருந்தகங்களிலும் பொதுச் சுகாதாரக் கழகங்களிலும் பெறலாம்.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துவழி பதிலில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, தடுப்பூசி உற்பத்தியாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை இந்த விலைக்குறைப்புக்கு வழிவகுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
2025 செப்டம்பர் மாதம் முதல், பெரியவர்களுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் அக்கி அம்மைத் தடுப்பூசிக்குத் தகுதிபெறும் அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் அதிகபட்சம் 75 விழுக்காடுவரை மானியம் வழங்கப்படும். வெளிநோயாளிகளாக வரும் முன்னோடி, மெர்டேக்கா தலைமுறையினர் கூடுதல் மானியங்களுக்குத் தகுதிபெறுவர்.
மானியங்களுக்குப்பின், சிங்கப்பூரர்கள் ஷிங்ரிக்ஸ் (Shingrix) தடுப்பூசியின் ஒரு தவணைக்கு 75 முதல் 300 வெள்ளிவரை கட்டவேண்டியிருக்கும் என்றும் நிரந்தரவாசிகள் தவணைக்கு ஏறக்குறைய 450 வெள்ளி கட்டணத்தை எதிர்பார்க்கலாம் என்றும் சுகாதார அமைச்சு முன்னர் வெளியிட்ட அறிக்கை கூறியது.
இம்மானியங்களுக்கு ஒருவர் தகுதிபெறவில்லையெனில், அவருக்கு அக்கி அம்மையால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு எனக் கருதலாம் என்றார் அமைச்சர் ஓங்.