வாகனவோட்டிகளுக்கான மதுபான வரம்பில் கூடுதல் கடுமை

சாலைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை 

வாகனவோட்டிகளுக்கான மதுபான வரம்பில் கூடுதல் கடுமை

2 mins read
081cdd51-6cf5-4398-8a75-59249878a9fc
தற்போது 100 மில்லிலிட்டர் அளவு மூச்சுக்காற்றில் 35 மைக்ரோகிராம் என்றுள்ள வரம்பானது இனி 100 மில்லிலிட்டர் அளவு மூச்சுக்கு 15 மைக்ரோகிராம் எனக் குறைக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாகன ஓட்டிகளுக்கான குறைந்தபட்ச மதுபான வரம்பளவு குறைக்கப்படும் என உள்துறை அமைச்சுக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்துள்ளார்.

தற்போது 100 மில்லிலிட்டர் மூச்சுக்காற்றில் 35 மைக்ரோகிராம் என்றுள்ள வரம்பானது இனி 100 மில்லிலிட்டர் அளவு மூச்சுக்கு 15 மைக்ரோகிராம் எனக் குறைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அவர் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) கூறினார்.

எவரும் தங்களை அறியாமல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதில்லை எனக் குறிப்பிட்ட திருவாட்டி சிம் ஆன், இத்தகையோரால் மிகக் கொடூரமான வாகன விபத்துகள் பல நடந்துள்ளதைச் சுட்டினார்.

இவ்வாண்டின் பிற்பகுதியில் அமலுக்கு வரும் இந்தப் புதிய விதிமுறை ஆசியாவில் தைவான், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இணையான கடுமையைக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா லீயின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருவாட்டி சிம் ஆன், சாலைகளின் பாதுகாப்பு குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனையை மேலும் அதிகரிப்பது குறித்த ஆய்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டப்பட்ட சில சம்பவங்களுக்கான தண்டனையை உயர்த்தும்படி கூறிய திருவாட்டி கசாண்ட்ரா லீயின் யோசனைக்கு நன்றி கூறுகிறேன். வேண்டுமென்றே மற்றொரு ஓட்டுநருக்கு ஆபத்து விளைவிப்பவருக்குத் தண்டனை அதிகமாக இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வருடாந்தர சாலைப் போக்குவரத்து நிலவரம் பற்றிய அறிக்கையின்படி, போக்குவரத்து மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

“போக்குவரத்து மரண விழுக்காடு 2021க்கும் 2025க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 24 விழுக்காடு அதிகரித்தது. இதே காலகட்டத்தில், போக்குவரத்து விதிமீறல் விகிதம் 38 விழுக்காடு ஏறுமுகமாக உள்ளது,” என்று திருவாட்டி சிம் ஆன் கூறினார்.

வாகனவோட்டி மேம்பாட்டுப் புள்ளிகள் கட்டமைப்பில் மாற்றம் இடம்பெறலாம்

போக்குவரத்து விதிமுறைகளுக்குக் கட்டுப்பட எல்லோரையும் ஊக்குவிப்பதற்காக உள்துறை அமைச்சு, வாகனவோட்டி மேம்பாட்டுப் புள்ளிகள் கட்டமைப்பை (Driver Improvement Points System) மேலும் கடுமையாக்க மறுபரிசீலனை செய்கிறது.

இதற்கான யோசனைகளில் வாகனங்களை ஓட்ட ஒருவரைத் தகுதிநீக்கம் செய்வதற்குத் தேவைப்படும் குற்றப் புள்ளிகளைக் குறைப்பதும் ஒன்றாகும்.

“இந்த முடிவுக்கு நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை. இருந்தபோதும், மோசமடைந்துவரும் சூழலைக் கட்டுப்படுத்தி ஆபத்தான வாகனவோட்டிகளைச் சாலைகளிலிருந்து அகற்ற மேலும் கடுமையான தண்டனை தேவைப்படலாம்,” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள் குறித்தும் அக்கறைப்படுவதாகக் கூறிய துணை அமைச்சர் சிம் ஆன், அந்த வாகனங்களை ஓட்டுவோரின் குற்றங்களைக் கையாள முன்தடுப்பு, அமலாக்க நடவடிக்கைகள் தேவை என்றும் கூறினார்.

“பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நாங்கள் செயலாற்றுகிறோம். விவரங்கள் தயாராகும்போது அவற்றை அறிவிப்போம்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்