மின்சைக்கிள் ஓட்டியபோது இருவரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற 19 வயது ஆடவருக்கு குறைந்தது ஓராண்டுக்கு சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர் விடுவிக்கப்படும் நாளிலிருந்து ஈராண்டுகளுக்கு எவ்வித வாகனத்தையும் ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெறவோ வைத்திருக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் ஆடவர் தனது மின்சைக்கிள் மூலம் உணவு விநியோகிக்கச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர், புவன விஸ்தாவில் உள்ள விஸ்தா எக்ஸ்சேஞ் கிரீன் சாலைச் சந்திப்பில் போக்குவரத்துச் சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாகக் கூறப்பட்டது.
சாலையைக் கடக்கும்போது இருவரை மோதிய அவர், நின்று அவர்களுக்கு உதவாமல் மின்சைக்கிளை ஓட்டிச் சென்றுவிட்டார்.
அவர் மோதிய இருவரில் ஒருவர் பிலிப்பீன்சைச் சேர்ந்த 31 வயதுப் பெண். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. மற்றொருவர் சக்கர நாற்காலி பயன்படுத்தும் 33 வயது ஆடவர். தலையில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆறு நாள்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற நேரிட்டது.
மின்சைக்கிள் ஓட்டிய இளையர், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தியோங் பாருவில் உள்ள சிற்றங்காடி ஒன்றில் நான்கு முறை பூட்டை உடைத்துச் சென்று திருடியதாகக் கூறப்பட்டது.
அவர் $3,910 ரொக்கத்தையும் நான்கு சிகரெட் பொட்டலங்களையும் திருடியதாகக் கூறப்பட்டது.
ஆபத்தான முறையில் மின்சைக்கிள் ஓட்டியது, கதவை உடைத்து உள்ளே சென்று திருடியது தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஆகஸ்ட் மாதம் ஒப்புக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
17 வயதாக இருந்தபோது 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் ஈடுபட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. திருட்டு தொடர்பான குற்றச்சாட்டும் அவற்றில் அடங்கும். தண்டனை விதிக்கும்போது அந்தக் குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.
சிறுவர் மற்றும் இளையர் சட்டத்தின்கீழ் அவரைப் பற்றிய மேல்விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.
சீர்திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்படும் இளங்குற்றவாளிகள், அதற்கான நிலையத்தில் தடுத்து வைக்கப்படுவர். அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவதோடு ஆலோசனையும் வழங்கப்படும்.