'குடலை உருவிவிடுவேன்': தாயாரைத் தாக்கி மிரட்டியவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

'குடலை உருவிவிடுவேன்': தாயாரைத் தாக்கி மிரட்டியவருக்கு சீர்திருத்தப் பயிற்சி

1 mins read
7337ae14-db3f-4f25-9614-cc897c8064b2
-

நேதன் சுபாஷ் எனும் 19 வயது இளையருக்கு சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபரில் தனது தாயாரைத் தாக்கிய இவர் நவம்பரில் அவரது குடலை உருவிவிடுவதாக மிரட்டினார் என்று கூறப்பட்டது.

தாக்குதல், துன்புறுத்தல் ஆகியவை தொடர்பில் நேதன்மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2022 டிசம்பர் மாதத்தில் அவற்றை ஒப்புக்கொண்டதையடுத்து வியாழக்கிழமை (பிப்ரவரி 23) அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில், செங்காங்கில் உள்ள இவர்களது வீட்டில், தாயார்மீது மெல்லிழைத்தாள் பெட்டியை நேதன் வீசினார். ஊசிபோன்ற கருவியால் பலமுறை குத்தினார்.

பாதுகாப்புக் கோரி தாயார் விண்ணப்பித்ததால், அதற்கேற்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் சில நாள் கழித்து, தாயாரிடம் சண்டையிட்ட நேதன் அவரைக் கொன்றுவிடப் போவதாக மிரட்டினார். 2022 நவம்பர் 9ஆம் தேதி பலவாறாகத் திட்டியபோது 'குடலை உருவிவிடுவேன்' என்று மிரட்டினார்.

அதேநாள் மாலையில் காவல்துறையினர் நேதனைக் கைது செய்தனர்.

சீர்திருத்தப் பயிற்சி மையத்தில் அவர் தடுத்து வைக்கப்படுவார். அங்கு கடுமையான உடற்பயிற்சிகளுடன் மனநல ஆலோசனையும் அவருக்கு வழங்கப்படும்.