எண் 1 சோஃபியா ரோட்டில் உள்ள பீஸ் சென்டர் கட்டடம் மறுமேம்பாடு காணவிருக்கிறது.
பீஸ் சென்டரும் அதன் அருகிலுள்ள பீஸ் மேன்ஷன் கட்டடமும் விற்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மறுமேம்பாட்டுத் திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மறுமேம்பாட்டுப் பணிகளுக்கான ‘திட்டமிடல் அனுமதி’ சென்ற ஆண்டின் (2023) நாலாம் காலாண்டில் கிடைத்ததாகக் கூறப்பட்டது.
பீஸ் சென்டர் நிலப்பகுதியில் 367 வீடுகளைக் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுரிமை அலுவலகங்கள், சில்லறை விற்பனை இடங்கள் ஆகியவற்றையும் இங்கு கட்டலாம்.
மறுமேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கான அனுமதி கிடைத்தபின் அதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்பட்டது.
7,118 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இந்த நிலப்பகுதியில் ‘ஒன் சோஃபியா’ எனும் வர்த்தகக் கட்டடமும் ‘த கலெக்டிவ் அட் ஒன் சோஃபியா’ என்ற பெயரில் இரண்டு குடியிருப்புக் கட்டடங்களும் கட்டப்படும்.
‘ஒன் சோஃபியா’ வர்த்தகக் கட்டடம் 13 மாடிகளைக் கொண்டிருக்கும். அதன்கீழ் மூன்று நிலத்தடித் தளங்களில் கார் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மறுமேம்பாட்டுப் பணிகள் 2028ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.