ரக்கைன் மாநிலத்தின் பாதுகாப்பு மேம்பட்டால்தான் அகதிகள் கொண்டுவரப்படுவர்: மியன்மார்

ரக்கைன் மாநிலத்தின் பாதுகாப்பு மேம்பட்டால்தான் அகதிகள் கொண்டுவரப்படுவர்: மியன்மார்

2 mins read
aca5400c-c9ec-4ca1-8bb1-739de0a6e67c
பங்ளாதே‌‌ஷில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள கிட்டத்தட்ட 309,000 பேர் கலவரம் மூண்ட ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

யங்கூன்: பங்ளாதே‌‌ஷில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள கிட்டத்தட்ட 309,000 பேர் கலவரம் மூண்ட ரக்கைன் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று மியன்மாரின் ராணுவ ஆதரவுபெற்ற அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரக்கைன் மாநிலத்தில் பாதுகாப்பு மேம்பட்ட பிறகுதான் அவர்களைத் திரும்ப கொண்டுவர முடியும் என்று மியன்மாரின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

பங்ளாதே‌ஷில் தஞ்சமடைந்துள்ள 828,824 நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டதில் இவ்வாண்டு ஜூலை 31 நிலவரப்படி, 308,797 பேர் ரக்கைன் மாநிலத்தின் முன்னாள் குடியிருப்பாளர்கள் என்பதைச் சரிபார்த்திருப்பதாக அமைச்சு கூறியது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள்படி, 2017ஆம் ஆண்டு மியான்மார் பாதுகாப்புப் படைகளின் அடக்குமுறையைத் தொடர்ந்து 700,000க்கும் அதிகமான ரோஹிங்யா மக்கள் அண்டை நாடான பங்களாதே‌ஷிற்குத் தப்பிச் சென்றனர்.

மேலும், பலர் இன்னமும் கடல் வழியாகவும் நிலவழிகள் மூலமும் மியன்மாரிலிருந்து தப்பிச் செல்கின்றனர்.

பங்ளாதே‌ஷின் திரும்ப அனுப்பப்படவேண்டியோரின் பட்டியலில் ஏறக்குறைய 4,241 பேர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாக மியன்மார் தெரிவித்தது. மேலும் 113,507 பேரை அடையாளம் காண முடியவில்லை.

மியன்மாரின் ராணுவம் அரக்கான் ராணுவத்தை எதிர்த்துப் போராடிவருகிறது.

ரக்கைன் மாநிலத்திற்குக் கூடுதலான தன்னாட்சி அதிகாரத்தைக் கோரி போராடி வரும் ‘அரக்கான் ராணுவம்’ என்ற இனக் குழுவை எதிர்த்து மியான்மர் ராணுவம் சண்டையிட்டுவருகிறது.

அகதிகளாக இருப்பவர்களைத் திரும்ப அனுப்புவது பங்ளாதே‌ஷுடன் உள்ள இருதரப்பு உறவு சார்ந்த விவகாரம் என்று மியன்மார் கூறியது.

2018, 2019ஆம் ஆண்டுகளில் இருதரப்பிலும் செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்குப் பிறகு எந்தவோர் அகதியும் திரும்ப வரவில்லை என்று மியான்மர் சுட்டிக்காட்டியது.

மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள 5,000 ரோஹிங்யா அகதிகளை மீண்டும் திரும்பப் பெற மியன்மார் ஒப்புக்கொண்டது. ஆனால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் இருந்தால் சொந்த நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என்று மலேசியா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்