நிலத்துக்கு அடியில் இருக்கும் 15 எம்ஆர்டி நிலையங்களின் தளமேடைத் தடுப்புக் கதவுகள் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் படிப்படியாகப் புதுப்பிக்கப்படும்.
புதுப்பிப்புப் பணிகள் காரணமாக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ஆகிய ரயில் பாதைகளில் இருக்கும் இந்நிலையங்களில் ரயில் சேவை பாதிப்படையாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 26) சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
கதவின் பாகங்களை மாற்றி அமைக்கும் பணிகள் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்புதுப்பிப்புப் பணிகள் அடங்கும் என்று ஆணையம் கூறியது.
தற்போதைய தளமேடைத் தடுப்புக் கதவுகள் பொருத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
புதுப்பிப்புப் பணிகளின்போது ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று கதவுகள் மட்டுமே மாற்றியமைக்கப்படும்.
ஆகஸ்ட் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மரினா பே நிலையத்தில் புதுப்பிப்புப் பணிகள் தொடங்கும்.
அதையடுத்து, இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்கும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பிரேடல், தோ பாயோ, பூகிஸ், லெவெண்டர் ஆகிய நிலையங்களில் உள்ள தளமேடைத் தடுப்புக் கதவுககள் மாற்றியமைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சோமர்செட், தஞ்சோங் பகார், ஊட்ரம் பார்க் நிலையங்களில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும்.
நகர மண்டப நிலையத்தின் வடக்கு-தெற்கு ரயில் பாதை தளமேடைகளிலும் தடுப்புக் கதவுகள் மாற்றப்படும்.
நகர மண்டபம், ராஃபிள்ஸ் பிளேஸ் ஆகிய நிலையங்களின் கிழக்கு-மேற்கு ரயில் பாதை தளமேடைகளிலும் ஆர்ச்சர்ட் மற்றும் டோபி காட் நிலையங்களிலும் புதுப்பிப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.
ஆகக் கடைசியாக, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நொவீனா, நியூட்டன், தியோங் பாரு ஆகிய நிலையங்களின் தளமேடைகளிலும் ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்தின் வடக்கு-தெற்கு ரயில் பாதை தளமேடைகளிலும் புதுப்பிப்புப் பணிகள் நடைபெறும்.
இந்தப் புதுப்பிப்புப் பணிகள் மூலம் எம்ஆர்டி நிலையங்களின் தளமேடைத் தடுப்புக் கதவுகள் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சுமுகமாகவும் பாதுகாப்புடனும் இயங்கும் என்று ஆணையம் தெரிவித்தது.