எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்ய வட்டார நாடுகளின் ஆதரவு தேவை: பிரதமர் வோங்

எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்ய வட்டார நாடுகளின் ஆதரவு தேவை: பிரதமர் வோங்

2 mins read
a05dad08-4299-4fca-ae25-8e9a323b5951
கம்யூனிட்டி பிளஸ் இணைய உச்சநிலைச் சந்திப்பில் வட்டார நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் வோங் பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை நம்பிக்கைக்குரிய வட்டாரப் பங்காளி நாடுகளின் உதவி இல்லாமல் சமாளிக்க முடியாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

எனினும், சிங்கப்பூர் வட்டார ரீதியான மீள்திறனை வலுப்படுத்த அதன் பங்கைச் செய்யும் என்ற அவர், மீள்திறன் என்பது ஒட்டுமொத்த முயற்சியால் வலுப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

கரிம வெளியேற்றத்தை முழுமையாகக் குறைப்பதற்கான கம்யூனிட்டி பிளஸ் இணைய உச்சநிலைச் சந்திப்பில் வட்டார நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் வோங் பேசினார்.

அதில், எந்த ஒரு நாடும் தனியாக எரிசக்தித் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாது என்று பிரதமர் வோங் நினைவூட்டினார்.

எனவேதான், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆசியான் உறுப்பு நாடுகள் போன்ற நம்பிக்கைக்குரிய பங்காளி நாடுகளின் இருதரப்பு ஆதரவையும் உறுதிப்பாட்டையும் சிங்கப்பூர் அதிகமாக மதிக்கிறது என்றார் பிரதமர் வோங்.

மத்திய கிழக்குப் போராலும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடையாலும் அனைவரும் கலங்கியுள்ளனர் என்று பிரதமர் வோங் சொன்னார்.

இறக்குமதி செய்யப்படும் எரிசக்திமீது வட்டார நாடுகள் அதிகம் சார்ந்திருக்கின்றன. எனவே, எரிசக்தி விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டால் வட்டார நாடுகளை அது பெரிய அளவில் பாதிக்கும் என்றார் அவர்.

“வர்த்தக நாடான சிங்கப்பூர், கொவிட்-19 நோய்ப்பரவல் காலகட்டத்தில் செய்ததுபோல துறைமுகங்களையும் வர்த்தகத் தொடர்புகளையும் தொடர்ந்து திறந்துவைத்திருக்கும். அதன் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விநியோகம் தொடர்வதைச் சிங்கப்பூர் உறுதிசெய்யும்,” என்று பிரதமர் வோங் உறுதியளித்தார்.

மாற்றுவழிகளில் எரிபொருள், இயற்கை எரிவாயு, இயற்கை எரிவாயுத் திரவங்கள் ஆகியவற்றின் விநியோகத்தை உறுதிப்படுத்த எண்ணெய் வர்த்தக, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி நடுவமான சிங்கப்பூர் அதனால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார் அவர்.

பிரதமர் வோங் கலந்துகொண்ட உச்சநிலைச் சந்திப்பிற்கு ஜப்பானியப் பிரதமர் சனே தக்காய்ச்சி தலைமைத் தாங்கினார்.

உச்சநிலைச் சந்திப்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தென்கொரியப் பிரதமர் கிம் மின் சியோக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், வியட்னாமியப் பிரதமர் லீ மின் ஹங், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் ஆகிய ஆசியான் தலைவர்களும் சந்திப்பில் பங்கேற்றனர்.

குறிப்புச் சொற்கள்