நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சிங்கப்பூரர்களின் பட்டியல் ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
ஜூன் 1ஆம் தேதி வரையில் கணக்கெடுக்கப்பட்ட, தகுதியுள்ள வாக்காளர்களை உள்ளடக்கியது அந்தப் பட்டியல்.
21 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய சிங்கப்பூர் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதிபெறுவர்.
அவர்களுக்கு சிங்கப்பூரில் குடியிருப்பு முகவரி இருப்பது அவசியம். மேலும், நடப்பில் உள்ள எந்தவொரு சட்டத்தின்கீழும் வாக்களிக்கத் தகுதியற்றவர் என அறிவிக்கப்படாதவராக இருப்பதும் அவசியம்.
வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது குறித்து சிங்கப்பூர் தேர்தல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சிங்கப்பூர் குடிமக்கள் இந்தப் பட்டியலை மின்னிலக்க வடிவிலோ நேரடியாகவோ சரிபார்த்துக்கொள்ளலாம் என்று அதில் தேர்தல் துறை குறிப்பிட்டுள்ளது.
மின்னிலக்க வடிவில் சரிபார்க்க விரும்புவோர் தேர்தல் துறை இணையத்தளத்தில் வாக்காளர் சேவைகள் என்னும் பிரிவில் தங்களது விருப்பத்தைத் தெரிவிக்கலாம். கைப்பேசிக்கான சிங்பாஸ் செயலி அல்லது 'லைஃப்எஸ்ஜி' செயலி வாயிலாக தங்களது விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள சமூக நிலையங்கள் அல்லது சமூக மன்றங்களுக்குச் சென்றோ 'சர்விஸ்எஸ்ஜி' நிலையங்களுக்குச் சென்றோ வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம்.
நொவினாவில் உள்ள தேர்தல் துறையின் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றும் அதனை சரிபார்க்கலாம். ஆனால், அங்கு செல்ல தேர்தல் துறையின் இணையத்தளத்திலோ 1800-225-5353 என்னும் தொலைபேசி வாயிலாகவோ முன்பதிவு செய்வது அவசியம்.
வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள் சிங்கப்பூர் வெளிநாட்டுச் சேவை நிலையத்தில் விவரங்களை சரிபார்க்கலாம். வெளிநாட்டுப் பதிவு மையங்களாக அவை செயல்படும்.
அடையாள அட்டையிலுள்ள பெயரோ இதர விவரங்களோ வாக்காளர் பட்டியலில் வேறுபட்டு இருந்தால் அதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். ஒருவர் வசிக்கும் பகுதியிலுள்ள வாக்கு மையத்திற்கான வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க ஆட்சேபம் தெரிவிக்கலாம்.
கோரிக்கை மற்றும் ஆட்சேபணையை இணையம் வாயிலாகவோ நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.
கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஜூலை 12 முதல் ஜூலை 19 வரை சரிபார்ப்புக்கு வைக்கப்படும். கடந்த தேர்தலில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வாக்களிக்க இயலாமற்போனவர்கள் இம்முறை அதனைச் சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கலாம் என்றும் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.

