ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சித் திட்டங்களுக்குப் பதிவுசெய்யும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது.
ஒருமுறை வழங்கப்பட்ட $500 மதிப்புள்ள ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புத்தொகை இம்மாதம் 31ஆம் தேதியுடன் காலாவதியாகவிருப்பதால் சிங்கப்பூரர்கள் விரைந்து பதிவுசெய்வதாகப் பயிற்றுநர்கள் கூறினர்.
ஒருசில பயிற்சித் திட்டங்களுக்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு துறைகளிலிருந்து தொடங்கி செல்லப்பிராணிகளைப் பராமரித்தல், ஆளில்லா வானூர்தியை இயக்குதல் வரை பல்வேறு பயிற்சித் திட்டங்களுக்கான முன்பதிவு சூடுபிடித்துள்ளது.
அதே பயிற்சியை மீண்டும் மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பயிற்றுநர்கள் கூறினர். பலர் அடுத்த ஆண்டிற்கான வகுப்புகளுக்கும் இப்போதே முன்பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் மாத நிலவரப்படி பத்தில் ஏழு சிங்கப்பூரர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் நிரப்புத்தொகையை இன்னும் பயன்படுத்தவில்லை.
2020ஆம் ஆண்டு கொவிட்-19 காலகட்டத்திற்குப் பிறகு 25 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எத்தனை பேர் அதைப் பயன்படுத்தியுள்ளனர் என்ற விவரத்தை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு பகிர்ந்துகொள்ளும் என்று தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வாழ்க்கைத்தொழிலை மாற்றிக்கொள்ள விரும்பும் 40 வயதிற்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கும் $4,000 மதிப்புள்ள பயிற்சிப் படித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அது காலாவதியாகாது என்று அமைப்பு சொன்னது.
மைஸ்கில்ஸ்ஃபியூச்சர் இணையத்தளத்தில் உள்ள பயிற்சித் திட்டங்களுக்குப் பதிவுசெய்ய சிங்கப்பூரர்கள் தங்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் உள்ள தொகையைப் பயன்படுத்த முடியும்.
மின்னிலக்கத் திறன்கள், தனிநபர் மேம்பாட்டுப் பயிற்சிகள் ஆகிய துறைகளில் உள்ள தேவை கடந்த இரண்டு மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ளதாகப் பயிற்றுநர்கள் கூறினர்.
வகுப்பறைகளின் அளவும் கிட்டத்தட்ட 20லிருந்து 30 விழுக்காடு பெருகியது.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் முன்பதிவு செய்தோர் எண்ணிக்கை 150 விழுக்காடு அதிகரித்தது.

