கேனிங் ரைஸ் வளாகத்தில் திருமணப் பதிவகத்தின் இறுதி நாள்

2 mins read
bf8fcb79-0fa9-4768-b5c5-7617507f29ff
கேனிங் ரைஸ் வளாகத்தில் செயல்பட்டு வந்த திருமணப் பதிவகமும் முஸ்லிம் திருமணப் பதிவகமும் இடமாறவிருக்கின்றன. - படம்: யோகிதா அன்புச்செழியன்

கேனிங் ரைஸில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவந்த திருமணப் பதிவகமும் முஸ்லிம் திருமணப் பதிவகமும் தற்காலிகமாக எஸ்பிளனேட் கடைத்தொகுதிக்கு இடமாறவிருக்கின்றன.

கேனிங் ரைஸ் வளாகத்தில் அவை செயல்படும் இறுதி நாள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) ஆகும்.

இடமாற்றத்தை முன்னிட்டு ஏப்ரல் 12, 13ஆம் தேதிகளில் நேரடித் திருமணப் பதிவுகளும் சேவைகளும் இடம்பெறமாட்டா.

எஸ்பிளனேட் கடைத்தொகுதியின் மூன்றாம் மாடியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) முதல் இரு பதிவகங்களும் சேவைகளைத் தொடரும். முன்னர் நூலகம்@எஸ்பிளனேட் இருந்த இடத்தில் அவை செயல்படும்.

தம்பதியரின் மாறிவரும் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சேவைகளை மேம்படுத்த, 2028ஆம் ஆண்டு வரை கேனிங் ரைஸில் அப்பதிவகங்கள் அமைந்திருந்த இடம் மறுமேம்பாடு காணும்.

கடந்த மூன்று ஆண்டுகளாகக் கேனிங் ரைஸ் தளத்தில் திருமணங்களை நடத்திவைக்கும் திரு செ. மனோகரன், 61, இவ்விடத்தில் பதிவகத்தின் இறுதி நாளன்று தமது அனுபவங்களைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகக் கேனிங் ரைஸ் தளத்தில் திருமணங்களை நடத்திவைக்கும் திரு செ. மனோகரன், 61.
கடந்த மூன்று ஆண்டுகளாகக் கேனிங் ரைஸ் தளத்தில் திருமணங்களை நடத்திவைக்கும் திரு செ. மனோகரன், 61. - படம்: யோகிதா அன்புச்செழியன்

“என் திருமணம் 1992ஆம் ஆண்டில் இங்குதான் நடந்தது. மணமகனாக நின்ற இடத்தில் மற்றவர்களின் திருமணங்களை நடத்திவைப்பவராகச் செயல்படுவதை அர்த்தமுள்ள செயலாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.

ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேலாக அடித்தளத் தலைவராகப் பணியாற்றும் மனோகரன், சமூகத்திற்கு மேலும் சேவை ஆற்றத் திருமணம் நடத்திவைப்பவராக தன்னார்வத் தொண்டு செய்யத் தொடங்கினார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகளின் திருமணங்களை நடத்திய நினைவுகளை அவர் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

“எதிர்காலத்தில், மூன்றாவது மகளின் திருமணத்தையும் நான்தான் நடத்திவைக்க வேண்டும் என்று அவர்களது தாயார் என்னிடம் கேட்டுக்கொண்டார்,” என்று மனோகரன் புன்சிரிப்புடன் கூறினார்.

தற்காலிக இடமாற்றத்தால் பிரச்சினை ஏதும் இருக்காது என்று கூறிய அவர் புதிய இடத்திலும் வழக்கம்போல் தமது கடமைகளைத் தொடர்ந்து செய்யவிருப்பதாகச் சொன்னார்.

“புதுப்பிக்கப்பட்ட கேனிங் ரைஸ் தளம் பல்வேறு மின்னி[Ϟ]லக்க வசதிகளுடன், அடுத்த தலைமுறையினர் மேலும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்படும் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.

மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 800 தம்பதியரின் திருமணங்களை நடத்திவைத்துள்ள மனோகரன், திருமணச் சடங்குகளில் தம்பதியரை வழிநடத்துவதில் மகிழ்ச்சி காண்கிறார்.

இந்தியத் தம்பதியருக்குத் திருக்குறள் வரிகளுடன் திருமணச் சடங்குகளை முடிப்பது இவரது வழக்கம். ஒற்றுமையாக வாழ்வதற்கான உதவியுரைகளையும் பரஸ்பர புரிதல், ஆதரவு முதலியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் அவர்களிடம் எடுத்துரைப்பார்.

“அவர்களின் திருமண நிகழ்ச்சியைச் சிறப்பிக்க ஒரு சிறிய பங்கு வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்றார் மனோகரன்.

திருமணப் பதிவகத்தில் 1983ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை 490,931 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமை மட்டும் 23 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்