திருமணப் பதிவகமும் முஸ்லிம் திருமணப் பதிவகமும் எஸ்பிளனேட் மாலில் உள்ள இடத்திற்குத் தற்காலிகமாக இடமாறவுள்ளன.
கேனிங் ரைசில் அவை தற்போது அமைந்துள்ள இடம் மறுமேம்பாடு காண்கிறது. அந்த இடம் ஏப்ரல் 11ஆம் தேதிக்குப் பிறகு செயல்படாது. எஸ்பிளனேட் மாலின் மூன்றாம் தளத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி அவை சேவைகளைத் தொடரும். லைப்ரரி@எஸ்பிளனேட் முன்னதாக இருந்த இடத்தின் ஒரு பகுதியில் பதிவகங்கள் அமையும்.
பதிவுத் திருமணங்கள் நடைபெறும் ஓர் இடமாக தம்பதிகளின் தேவைகளை மேலும் பூர்த்திசெய்யவும் திருமணப் பயணத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்தவும் கேனிங் ரைஸ் தளம், 2025 முதல் 2028 வரை மறுமேம்பாடு காணவுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) வெளியிட்ட கூட்டறிக்கையில் இதைத் தெரிவித்தன.
இடமாற்றத்தை முன்னிட்டு ஏப்ரல் 12, 13ஆம் தேதி வாரயிறுதியில், கேனிங் ரைசில் நேரடித் திருமணப் பதிவுகள் இடம்பெற மாட்டா.
வெளியிடங்களில் நடைபெறும் திருமணப் பதிவுகள் பாதிக்கப்பட மாட்டா என இரு அமைச்சுகளும் கூறின.
ஏப்ரல் 14 முதல் திருமணப் பதிவகத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அனைத்து பதிவுத் திருமணங்கள், எஸ்பிளனேட் மால் இடத்திற்குத் தானாகவே மாற்றப்படும். ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த தம்பதிகளுக்கு, இந்த மாற்றம் குறித்து தெரியப்படுத்தப்படும்.
திருமணப் பதிவகமும் முஸ்லிம் திருமணப் பதிவகமும் 1983லிருந்து கேனிங் ரைசில் உள்ள தற்போதைய இடத்தில் செயல்பட்டு வந்துள்ளன. இவ்விரு பதிவகங்களின் கட்டடம் குறித்த மேல்விவரங்கள் பிந்தைய ஒரு தேதியில் பகிரப்படும் என்று இரு அமைச்சுகளும் தெரிவித்தன.

