கிழக்கு-மேற்கு பாதையின் ஆறு நிலையங்களில் வழக்கமான ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) தொடரும். தண்டவாளப் பணிகள் திட்டமிட்டதைவிட ஒரு தினத்துக்கு முன்னதாக முடிக்கப்பட்டு விட்டதால் இது சாத்தியமாவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.
தானா மேரா, சீமெய், தெம்பனிஸ், பாசிர் ரிஸ், எக்ஸ்போ, சாங்கி விமான நிலையம் ஆகிய ஆறு நிலையங்களில் வழக்கமான ரயில் சேவை டிசம்பர் 7 முதல் 10 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என ஆணையம் முன்னதாக அறிவித்திருந்தது. கிழக்கு-மேற்கு பாதையைப் புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனையுடன் இணைக்க தண்டவாளப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆணையம் திங்கட்கிழமை (டிசம்பர் 9) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், பணிக்குழுக்கள் விரிவான சோதனையை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.
தண்டவாளங்களை மாற்றி, அவற்றைப் பரிசோதித்து, பயணிகளுக்கு உதவ டிசம்பர் 7 முதல் 500க்கும் அதிகமான ஆணைய ஊழியர்கள், பொதுப் போக்குவரத்து நிறுவன ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், கூட்டக் கட்டுப்பாட்டாளர்கள் பணியாற்றி வந்ததாக ஆணையம் தெரிவித்தது.
போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் திங்கட்கிழமை வெளியிட்ட வேறொரு ஃபேஸ்புக் பதிவில் பொறியாளர்கள், தொழில்நுட்பர்கள், ஊழியர்கள் உட்பட பணியில் ஈடுபட்ட வெவ்வேறு குழுக்களுக்கு நன்றி கூறினார்.
“உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு உங்களின் ஆதரவுக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் எனது நன்றி,” என்றார் அவர்.

