கடும் வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களைப் பாதுகாக்கும் விதிமுறைகள்: அமைச்சு விளக்கம்

கடும் வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களைப் பாதுகாக்கும் விதிமுறைகள்: அமைச்சு விளக்கம்

2 mins read
d96f3472-c283-4555-a329-364bcb39e182
வெளிப்புறத்தில் வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களைப் பாதுகாக்கும் திருத்தப்பட்ட நடைமுறைகள் செப்டம்பர் 6ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிப்புறத்தில் வெயிலில் வேலை பார்க்கும் ஊழியர்களை நிறுவனங்கள் பாதுகாக்கும் நடைமுறைகளை மனிதவள அமைச்சு எளிமையாக்கியிருக்கிறது.

ஏற்கெனவே உள்ள மக்களுக்கான ஆலோசனைகளின் அடிப்படையில் பாதுகாப்பு நடைமுறைகளை அமைச்சு மாற்றி அமைத்துள்ளது.

மேலும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளுக்கும் பரிந்துரைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அமைச்சு தெளிவுபடுத்தியிருக்கிறது.

அதன்படி, வெப்பமான சூழலை பழக்கிக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வைத்திருத்தல், ஊழியர்கள் ஓய்வெடுக்க கூரை போடப்பட்ட இடத்தை உறுதி செய்தல் உள்ளிட்டவை கட்டாய விதிமுறைகளாகும்.

வெளிப்புற வேலைகளை நாளின் குளிர்ச்சியான சமயங்களில் மாற்றியமைத்தல் போன்றவை , பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளாகும்.

ஊழியர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வெப்பப் பாதுகாப்பு நடைமுறைகள் செப்டம்பர் 6ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.

ஊழியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை அறிய வேலையிடங்களில் சோதனை நடத்தப்படும் என்று மனிதவள அமைச்சு செப்டம்பர் 6ஆம் தேதி தெரிவித்தது.

இத்தகைய விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதாக எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்படும் அல்லது வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அமைச்சு நினைவூட்டியது.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட பொதுமக்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் தேசிய ஆலோசனைகளின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

‘Wet Bulb Globe Temperatures: WBGT’ அளவின்படி குறைவான, மிதமான, அதிகமான வெப்பம் என மூன்று வகையில் வெப்பநிலை ஆலோசனைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

WBGT-முறையில் காற்றின் வெப்பநிலை மட்டுமல்லாது, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் சூரியனின் கதிர்வீச்சு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

WBGT அளவீடு 31 டிகிரி செல்சியசுக்கும் கீழ் இருந்தால் குறைந்த வெப்பத்தையும் 33 டிகிரி செல்சியசுக்கு மேல் இருந்தால் அதிக வெப்பத்தையும் குறிக்கும்.

ஆனால் வெளிப்புறத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 32 டிகிரி செல்சியஸ் இருந்தாலே அதிக வெப்பம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது, கட்டுமான ஊழியர்கள், வெளிப்புற துப்புரவாளர்கள், கப்பல் பட்டறை ஊழியர்கள், விநியோகிப்பு ஊழியர்கள் போன்றோருக்குப் பொருந்தும்.

அந்த வெப்பநிலையில் கடினமான உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கூரை போடப்பட்ட இடத்தில் பத்து நிமிடத்திற்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். வெப்பநிலை 33 டிகிரி செல்சியசுக்கு மேல் இருந்தால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குறைந்தது 15 நிமிடங்களுக்கு ஓய்வு நேரத்தை அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சு கூறியது.

காற்றோட்டமான இடத்தில் ஓய்வெடுத்தல், கடுமையான வெயிலிலிருந்து ஊழியர்களை நிழலான இடத்திற்கு மாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் உடலிலிருந்து அதிக நீர் வெளியேறுவதைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் அதிக வெப்பநிலையிலிருந்து பாதுகாக்கும் என்று ஜூலை மாத அனைத்துலக தொழிலாளர் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்