மின்சிகரெட் பயன்பாட்டுக்கு எதிராகக் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
அதன்பிறகும் 39 பேர் எட்டோமிடேட் போதைப் பொருள் கலந்த மின்சிகரெட் குற்றங்களுக்குக் கைதாகியுள்ளனர். அவர்கள் அன்றைய தேதி முதல் மறுவாழ்வுப் பயிற்சித் திட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இதனை சுகாதார அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் சனிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்தன.
அவர்கள் மேற்கொள்ளும் மறுவாழ்வுப் பயிற்சிகள், மனநலக் கழகம் அல்லது சமூக சேவை அமைப்புகளில் நடைபெறும்.
பிடிபட்டோரின் விவரங்களை வழங்கிய அரசாங்க அமைப்புகள், செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதிவரையில் 656 பேர் மின்சிகரெட் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காகக் கைதாயினர். அவர்களில் 44 பேர் எட்டோமிடேட் போதைப்பொருள் கலந்த சாதனங்களை வைத்திருந்தனர் என்று அவை தெரிவித்தன.
எட்டோமிடேட் பயன்படுத்திய மூவர், மனநலக் கழகம் அல்லது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மேம்படுத்தப்பட்ட மேற்பார்வைத் திட்டத்தின்கீழ் மறுவாழ்வுப் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர். மேலும் 36 பேர் இந்த வாரம் பயிற்சிகளைத் தொடங்க இருக்கின்றனர். எஞ்சிய ஐவர் மீதான விசாரணை தொடர்கிறது.