தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெண்கள் மீண்டும் குற்றவாளி ஆவதைத் தடுக்க உதவும் மறுவாழ்வுத் திட்டம்

2 mins read
bacdadff-126b-44aa-a598-1ee0c0b4ebd2
பெண் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டம் சிங்கப்பூர் சிறைத்துறையால் 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெண் குற்றவாளிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள், அவர்கள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதைக் குறைக்க உதவியுள்ளன.

பெண்களுக்காகவே வகுக்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பெண் குற்றவாளிகள் உதவி பெற்று வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் சிங்கப்பூர் சிறைத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் தங்களது வாழ்க்கையில் அவரவர் பொறுப்புக்கு ஏற்ப பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதை அறிந்து அத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

சில பெண்கள் வெவ்வேறு பொறுப்புகள் தொடர்பான துன்புறுத்தல் உள்ளிட்ட மோசமான அனுபவங்களைச் சந்தித்தவர்கள்.

அதனால், தாய்மைப் பொறுப்பு, மன அதிர்ச்சி, மனநலத் தேவைகள் மற்றும் தம்மைப் பற்றிய எதிர்மறைச் சிந்தனைக்கு ஏற்ற வகையிலான ஆதரவு பெண் கைதிகளுக்கு அவசியமாகிறது.

பெண்களுக்காகவே அளிக்கப்பட்ட மறுவாழ்வு உதவிகள் பலனளித்து இருப்பதாக உள்துறை துணை அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்து உள்ளார்.

குற்றமிழைத்து, தண்டனை அனுபவித்து, விடுதலை ஆன பின்னர் ஈராண்டுகளுக்குள் மீண்டும் குற்றத்தில் ஈடுபடும் பெண்களின் விகிதம் குறைந்து இருப்பதாக அவர் சொன்னார்.

2017ஆம் ஆண்டு விடுதலை ஆன பெண்களிடையே 20.7 விழுக்காடாக இருந்த அந்த விகிதம், 2021ஆம் ஆண்டு விடுதலை ஆனோரிடம் 15.3 விழுக்காடாகச் சரிந்தது.

இதனை சிங்கப்பூர் சிறைச் சேவைகள் துறையின் புள்ளிவிவரம் காட்டியது.

பெண் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவுக்குக் கிடைத்த பலனை இது உணர்த்துவதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் தெரிவித்தார்.

சாங்கி சிறைச்சாலை பயிற்சிக் கழகத்திற்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) வருகை அளித்த அவர், “விடுதலை ஆகி மீண்டும் குற்றத்தில் ஈடுபடக்கூடிய பெண்களின் விகிதம் குறைந்து உள்ளது. வெவ்வேறு குழுக்கள் ஒன்று சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக மிகவும் சாதகமான விளைவுகள் ஏற்பட்டதை அறிந்து மகிழ்கிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்