தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டதுடன், பள்ளியின் இரு ஊழியர்களைப் பேனாக்கத்தியால் காயப்படுத்திய 17 வயது மாணவிக்குக் குறைந்தது ஆறு மாத சீர்திருத்தப் பயிற்சி வியாழக்கிழமையன்று (மே 14) விதிக்கப்பட்டது.
அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றச்சாட்டை அந்த மாணவி கடந்த ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டார்.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பள்ளிக்குத் தாமதமாகச் சென்ற மாணவியின் கைப்பேசியைச் செயல்பாட்டு மேலாளர் பறிமுதல் செய்தார். இடைவேளையின்போது கைப்பேசியைத் திருப்பிக் கேட்ட மாணவிக்கு அதைத் தர அவர் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவி, பேனாக்கத்தியால் முதலில் தன்னைக் காயப்படுத்திக்கொண்டு, பின்னர் மேலாளரின் இடது கையில் காயம் விளைவித்தார். அவரைத் தடுத்து நிறுத்த வந்த ஒழுங்குமுறை ஆசிரியரின் கையிலும் அந்த மாணவி பேனாக்கத்தியைக் கொண்டு காயம் ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அந்த மாணவி வீடு திரும்பினார். அவர் அங்கு கைது செய்யப்பட்டார். சிறுவர், இளையர் சட்டத்தின்கீழ் மாணவியின் அடையாளம் பாதுகாக்கப்படுகின்றது. அவர் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஜூன் 15ஆம் தேதி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

