தனிப்பட்ட பாதுகாப்பு ஆணை கோரிய பெண்ணின் விண்ணப்பம் நிராகரிப்பு

2 mins read
0014f5db-9896-4423-babd-1fc5ca1b63cb
குடும்ப வன்முறையில் கணவர் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் குற்றத்தைப் பெண் நிரூபிக்கத் தவறியதாக நீதிபதி ஒருவர் கூறியுள்ளார்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கணவர் உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறி தனிப்பட்ட பாதுகாப்பு ஆணை கோரிய பெண்ணின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கணவர், 14 வயது மகளை வீட்டில் மின்சாரத்தையும் எரிவாயுவையும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்று பெண் சொன்னார். மகனிடம் மகளைப் பற்றி வருத்தப்படும்படியான கருத்துகளைக் கணவர் கூறியதாக அந்தப் பெண் குறிப்பிட்டார். மகளைப் பற்றிக் காவல்துறையிடம் புகாரளிக்கப்போவதாக அவர் அச்சுறுத்தியதாகவும் பெண் கூறினார்.

இருப்பினும் குடும்ப வன்முறையில் கணவர் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் குற்றத்தைப் பெண் நிரூபிக்கத் தவறிவிட்டதாக மாவட்ட நீதிபதி ஜானிஸ் சியா தெரிவித்தார். பெண் கேட்டிருந்த PPO எனும் தனிப்பட்ட பாதுகாப்பு ஆணையையும் நீதிபதி நிராகரித்தார். அத்துடன் தமக்கும் தமது மகளுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற கூடுதல் உத்தரவுகளுக்கான விண்ணப்பங்களையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

PPO என்பது ஒருவர் குடும்ப வன்முறையில் இறங்குவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவு. பெண், தம்மையும் மகளையும் சந்திப்பதற்கும் தொடர்புகொள்வதற்கும் கணவருக்குத் தடை விதிக்கும் உத்தரவு உட்பட இன்னும் சில ஆணைகளைப் பிறப்பிக்கும்படி கோரியும் விண்ணப்பித்திருந்தார். பெண்ணும் ஆடவரும் திருமணத்தை முறித்துக்கொள்வதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

உணர்வு ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவது, இவ்வாண்டு (2025) ஜனவரி மாதத்திலிருந்து குடும்ப வன்முறையாகச் சட்டத்தில் வகைப்படுத்தப்பட்டது. அத்தகைய சம்பவங்களின் தொடர்பில் தெரியவந்த தீர்ப்புகளில் அண்மை வழக்கும் ஒன்று என்று சட்டத்துறை நிபுணரான வழக்கறிஞர் டோரத்தி டான் கூறினார்.

டிசம்பர் 15ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் நீதிபதி, மாதர் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணர்வு ரீதியான, மன ரீதியான துன்புறுத்தலை எப்படிப் புரிந்துகொள்வது என்பதன் தொடர்பில் அண்மை வழக்கு கவனம் செலுத்தியதாகக் கூறினார். வேதனை தரும் எல்லா நடவடிக்கைகளும் உணர்வு ரீதியான துன்புறுத்தலாக எடுத்துக்கொள்ளப்படாது என்றார் நீதிபதி.

குறிப்புச் சொற்கள்