கேலாங் சிராய் கலாசார வட்டத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அந்தப் பகுதியில் கேலாங் சாலையிலிருந்து ஜூ சியட் சந்திப்புவரை அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதுவே இந்தப் பகுதியின் முக்கிய அடையாளமாகவும் விளங்குகிறது.
மலாய் கம்பத்து வீடுகளை ஒட்டி வடிவமைக்கப்பட்ட அலங்கார வளைவு, கேலாங் சிராய் ஈரச்சந்தை, ஹோட்டல் 81 ‘டிரைஸ்டார்’ சந்திப்பில் உள்ளது.
அந்தக் கலாசார வட்டத்தின் சாலைகளில் பாரம்பரிய மலாய் பின்னல் பொருள்கள் பாணியில் ஓவியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும் பகிர்ந்துகொள்ள ஏதுவான ஒரு தடமும் புனரமைப்புப் பணிகளின் ஓர் அங்கமாக விளங்குகிறது.
ஜூ சியட் கடைத்தொகுதி நுழைவாயிலின் மேலடுக்குப் பகுதியில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதுடன் அங்கு விளையாட்டுப் பகுதி, சைக்கிள் நிறுத்துமிடம் ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்ட நடைத்தளம், வாடிக்கையாளர்களை வாகனங்களிலிருந்து இறக்கிவிடும் தடம் ஆகியவையும் உள்ளன.
இந்த அலங்கார வளைவின் திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சனிக்கிழமையன்று (செப்டம்பர் 7) வருகையளித்த பிரதமர் லாரன்ஸ் வோங், கேலாங் சிராய் பலஇன, பலசமய சமுதாயத்தை எடுத்துக்காட்டும் ஒருங்கிணைந்த சிறப்பு வாய்ந்த சமூகமாக விளங்குவதாகக் கூறினார்.


