பொதுப் போக்குவரத்து பற்றி சிறார்க்கான உயிரோவியத் தொடர் வெளியீடு

பொதுப் போக்குவரத்து பற்றி சிறார்க்கான உயிரோவியத் தொடர் வெளியீடு

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: சாவ் பாவ்

24 Nov 2026 - 5:42 pm

1 mins read

நான்கு முதல் எட்டு வயது வரையிலான சிறாருக்குச் சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்தும் முப்பரிமாண உயிரோவியத் தொடரை நிலப் போக்குவரத்து ஆணையம் தொடங்கியுள்ளது.

‘ரைட் அண்ட் சீக் வித் ஜே அண்ட் எல்லா’ எனும் ஆறு அங்கங்கள் கொண்ட இத்தொடரைப் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் சுன் ஷுவெலிங் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) சுங்கை பிடோக் ரயில் நிலையத்தில் தொடங்கிவைத்தார்.

பேருந்துகள், ரயில்களில் பயணம் செய்வது குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதும் கனிவுமிக்க பயணப் பழக்கங்களைக் கற்றுத்தருவதும் இதன் நோக்கமாகும்.

இதையொட்டி, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் டிசம்பர் 26ஆம் தேதி திறக்கப்படவுள்ள பிடோக் சவுத், சுங்கை பிடோக் நிலையங்களை ஏறத்தாழ 200 சிறாரும் பெற்றோரும் முன்கூட்டியே பார்வையிட்டனர்.

அந்நிலையங்களுடனும் டௌன்டவுன் பாதையின் புதிய ஸீலின் நிலையத்துடனும் பயணிகள் சேவைகள் அன்றைய தினம் நண்பகல் தொடங்கும் எனத் திருவாட்டி சுன் தெரிவித்தார். இப்புதிய ரயில் இணைப்புகள், சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க சிறாரைத் தூண்டும் என்றார் அவர்.

‘ஜே’, ‘எல்லா’ கதாபாத்திரங்கள் முறையே எம்ஆர்டி ரயிலையும் பச்சைப் பேருந்தையும் அடிப்படையாகக் கொண்டவை. நான்கு சிறாரின் பயணச் சாகசங்கள் வழியாகப் போக்குவரத்துச் செயல்பாடுகள், பராமரிப்புப் பணிகள், மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் ஆகியவை விளக்கப்படுகின்றன.

முதல் மூன்று அங்கங்கள் செவ்வாய்க்கிழமைமுதல் ஆணையத்தின் யூடியூப் தளத்திலும் எஞ்சியவை டிசம்பரிலும் வெளியாகும். பெற்றோர், பிள்ளைகளுடன் இத்தொடரைப் பார்த்து அன்றாடப் பயணங்களில் இப்பாடங்களை வலியுறுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்போக்குவரத்துசிறார்