புவிசார் அரசியல், வர்த்தக முறைகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இடையே, வர்த்தக நிறுவனங்களும் அரசாங்கங்களும் சரியான முடிவுகளை எடுக்க நம்பகமான செய்தித்துறை முன்பைவிட இப்போது மிகவும் இன்றியமையாததாக மாறியுள்ளது என்று எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் யெங் கிட் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் புதன்கிழமையன்று (ஜூன் 17) நடைபெற்ற ஆசியப் பொருளியல் உச்சநிலை மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
அப்போது, உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இடையே தென்கிழக்காசியா மிக முக்கியமான மையப்புள்ளியாகத் திகழ்வதாகத் திரு சான் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தென்கிழக்காசியாவில், துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களின் தேவை மிக முக்கியமானது என்றார் அவர் . செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது பல நூற்றாண்டுகால மாற்றங்களை வெறும் சில ஆண்டுகளில் சுருக்கி, அரசாங்கங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் ஒரே நேரத்தில் நன்மைகளையும் சவால்களையும் கொடுத்து வருவதாகத் திரு சான் சுட்டிக்காட்டினார்.
அண்மைய ஆய்வுகளின்படி, உலகளாவிய சராசரியைவிட தென்கிழக்காசிய நிறுவனங்கள் மிக வேகமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இந்த வேகமான மாற்றங்களுக்கு இடையே, சுதாரிப்புடன் செயல்பட நம்பகமான செய்தித்துறையின் வழிகாட்டுதல் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
‘டெக் இன் ஆசியா’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு, எஸ்பிஎச் மீடியாவின் சாவ்பாவ், பிஸ்னஸ் டைம்ஸ் ஆகிய நாளிதழ்களின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசாங்க உயர் அதிகாரிகள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உட்பட ஏறத்தாழ 250 பேர் கலந்துகொண்டனர்.

