நம்பகமான செய்திகள்: சிறந்த முறையில் வெளியிட எஸ்பிஎச் மீடியாவும் கூகலும் இணக்கம்

நம்பகமான செய்திகள்: சிறந்த முறையில் வெளியிட எஸ்பிஎச் மீடியாவும் கூகலும் இணக்கம்

2 mins read
9c552175-42f6-47b8-8743-a2a01d862fd7
கூகல் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் பென் கிங் (இடது), எஸ்பிஎச் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சான் எங் கிட். - படம்: சாவ்பாவ்

எஸ்பிஎச் மீடியாவும் கூகல் நிறுவனமும் நான்கு முக்கிய அம்சங்களில் ஒத்துழைக்க இணங்கியுள்ளன. அதன் தொடர்பில் இரு நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) கூட்டறிக்கையொன்றை வெளியிட்டன.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆற்றலை வளர்த்தல், உள்ளடக்கம் மற்றும் விநியோகம், திறனாளர் மற்றும் தகுந்த சூழல் உருவாக்கம், ரசிகர்கள்/வாசகர்கள் ஈடுபாடு ஆகியவையே அந்த அம்சங்கள்.

எஸ்பிஎச் மீடியாவின் செய்தியறைகள், அதிநவீனச் செயற்கை நுண்ணறிவு ஆற்றல்களுடன் இயங்குவதை உறுதிசெய்ய இரு நிறுவனங்களும் இணைந்து செயல்படப்போவதாகக் கூட்டறிக்கையில் குறிப்பிட்டன. புதிய உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கான ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிப்பதும் அதில் அடங்கும். புலனாய்வுத் தகவல்களையும் செய்திகளையும் சரிபார்க்க அது உதவியாக இருக்கும்.

செய்தியறைகளின் வேலை நடைமுறையில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த அத்தகைய முயற்சிகள் கைகொடுக்கும்.

தொழில்நுட்பத்தின் மூலம் செயல்திறனை மேம்படுத்தும் அதே நேரத்தில் செய்திகளை நம்பகமான, பொறுப்பான முறையில் வழங்குவதற்கும் அது துணைபுரியும் என்று இரண்டு நிறுவனங்களும் தெரிவித்தன.

சிங்கப்பூரில் அத்தகைய நிலையில் கூகலுடன் இணைந்து செயலாற்றும் ஒரே ஊடக நிறுவனம் எஸ்பிஎச் மீடியா மட்டுமே. ஜெர்மனியின் செய்திச் சஞ்சிகையான டெர் ‌‌ஷ்பீகல், அமெரிக்க நாளேடான வா‌ஷிங்டன் போஸ்ட், பிரிட்டி‌‌ஷ் நாளிதழான கார்டியன் முதலியவை கூகலுடன் இதற்கு முன்னர் கூட்டுச் சேர்ந்த பெரிய செய்தி நிறுவனங்கள்.

எஸ்பிஎச் மீடியாவின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி குவெக் யு சுவாங், “சிங்கப்பூரின் மிகப் பெரிய, ஆக நம்பகமான, ஆக அதிக விருதுகளைப் பெற்றுள்ள செய்தி நிறுவனமான எஸ்பிஎச் மீடியா, அதன் இலக்குகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல, புத்தாக்கமான கூட்டு முயற்சிகளில் ஈடுபட எப்போதுமே முனைகிறது.

“எஸ்பிஎச் மீடியா, பொறுப்பான ‘ஏஐ’ பயன்பாட்டுடன் ஆகச் சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்திகளை உயர்ந்த தரத்தில் வழங்குவதைப் புதிய இணக்கம் உறுதிசெய்யும். அத்துடன், வாசகர்களுடன் தொடர்பை விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் உதவும்,” என்றார்.

உள்ளூர்ப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களிலிருந்து செய்தித் துறைக்குத் திறனாளர்களை ஈர்த்துப் பேணி வளர்க்க உதவும் திட்டமொன்றும் அறிமுகம் கண்டது. அதன்வழி, செய்தித் துறையில் புதிய படைப்புகளை உருவாக்குவதற்கு இளையர்கள் ஊக்குவிக்கப்படுவர்.

‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் ஆற்றல்பெற்றவர்களை உருவாக்கவும் திட்டம் முனையும்.

குறிப்புச் சொற்கள்