தெம்பனிசில் சமய வெறுப்புணர்வு சம்பவம்; 36 வயது ஆடவர் கைது

தெம்பனிசில் சமய வெறுப்புணர்வு சம்பவம்; 36 வயது ஆடவர் கைது

மாதிரிப்படம்: பிக்சாபே

17 Mar 2026 - 6:11 pm

1 mins read

மற்றொருவரின் சமய உணர்வை வேண்டுமென்றே அவமதித்ததாகச் சந்தேகிக்கப்படும் 36 வயது ஆடவர் மார்ச் 15ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அது தொடர்பாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 15ஆம் தேதி பிற்பகல் 3.40 மணியளவில் தெம்பனிஸ் ஸ்திரீட் 82ல் உள்ள குடியிருப்பு ஒன்றின் வாசலில் இஸ்லாமிய சமயம் குறித்த அவதூறான கருத்துகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தது. மேலும், அந்த வீட்டின் வாசலில் பன்றி இறைச்சி என நம்பப்படும் இறைச்சித் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக அதில் காவல்துறை குறிப்பிட்டது.

அச்சம்பவம் நடந்த அன்றைய தினமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் அது கூறியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது அவை இரண்டும் விதிக்கப்படலாம்.

முன்னதாக, பள்ளிவாசல் ஒன்றிற்குப் பன்றி இறைச்சி அடங்கிய பொட்டலத்தை அனுப்பியதாகக் கூறப்படும் நபர்மீது 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்