சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய ஆசிரியர்கள், தற்போது சமூகத்தினரைப் பாதித்துவரும் பல்வேறு விவகாரங்களைச் சமாளிக்க அவர்களுக்குக் கைகொடுத்து வருவதாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சமூகச் சவால்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள், புவிசார் அரசியல் பிரச்சினைகள் உள்ளிட்ட தற்காலச் சவால்களைக் கையாள சமய ஆசிரியர்கள் உதவுவதாகப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது பேசிய அவர், “அசாட்டிஸா எனப்படும் சமய ஆசிரியராக இன்று பணியாற்றுவதற்கு ஆழ்ந்த சமய அறிவு மட்டுமின்றி பக்குவம், பரிவு ஆகியவற்றால் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பாலம் அமைக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்,” என்று கூறினார்.
கட்டமைப்புகளை வழங்குவதைத் தாண்டி, சமூகப் பிணைப்பை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களைச் சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் வழங்குவதாக இணைப் பேராசிரியர் ஃபைஷால் கூறினார்.
இளையர்களைப் பங்காளிகளாக இணைத்துக்கொண்டு அவர்களது நலனை மேம்படுத்த பள்ளிவாசல்கள் இன்னும் அதிகமாகச் செய்யலாம் என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜஃபார் கூறியதற்குத் தாம் உடன்படுவதாகப் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
“நெக்ஸ்ட்ஜென் எஸ்ஜி பள்ளிவாசல் இளையர் கருத்தரங்கு, முஃப்தியுடன் கலந்துரையாடல்கள் போன்ற வழிகளில் தற்கால விவகாரங்கள் குறித்து இளையர்கள், சமயத் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடலாம்,” என்று அவர் கூறினார்.
பேச்சுடன் நின்றுவிடாமல் தலைவர்களும் இளையர்களும் வெளியே சென்று பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறிய பேராசிரியர் ஃபைஷால், அவ்வாறு ஒன்றாக நேரத்தைச் செலவு செய்யும்போதுதான் ஒருவரிடம் ஒருவர் கற்றுக்கொள்வதாகக் கூறினார்.
மேலும், 2028ல் மாணவர்களை வரவேற்கவுள்ள சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரி, இந்த ஆண்டு தனது பங்காளித்துவத்தை வெளிநாட்டுக் கல்வி நிலையங்கள் சிலவற்றுடன் உறுதிசெய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

