சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டுத் தலையீடு கலப்பதற்கு எதிராக மலாய், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடினர்.
அந்தத் தலையீடுகள், தவறான தகவல்களைப் பரப்பி சிங்கப்பூர் சமூகத்தின் உறவுகளைச் சீர்குலைக்கும் என்றும் தேசிய அடையாளத்தைப் பலவீனப்படுத்தும் என்றும் அந்தத் தலைவர்கள் ஒருசேரத் தெரிவித்தனர்.
கிராண்ட் ஹயட் சிங்கப்பூர் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) நடைபெற்ற கலந்துரையாடலில் ஏறத்தாழ 40 தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அண்மையில் மலாய், முஸ்லிம் சமூகத்தைத் தவறாகச் சித்திரிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் காணப்பட்டதைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் தலையீடு என்னும் அச்சுறுத்தல் தொடர்பாகக் கலந்துபேசவும் சமூகத்தின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கவும் அந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
‘எஸ்ஜி60: சமூகத்தை முன்னேற்றுவோம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், தீவிரவாதச் சித்தாந்தத்திற்கு இளையர்கள் துணைபோகும் அபாயம் உள்ளிட்ட பல அம்சங்கள் ஆராயப்பட்டன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்லூரி தொடர்பிலான அம்சத்தில் சமய போதகர்களின் சம்பளமும் அவர்களின் நல்வாழ்வும் இடம்பெற்றன.
தாமான் பகான் என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மலாய் இளைய நூலகர் சங்கம், ஏசிஜி (ACG) என்னும் அமைப்புடன் இணைந்து அந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சிங்கப்பூர் அரசியலில் வெளிநாட்டின் தலையீட்டை அடியோடுப் புறந்தள்ள வேண்டும் என தாமான் பகான் தலைவர் அப்துல் ஹாலிம் காதர் தெரிவித்தார்.

