மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியின் எஞ்சிய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெம்பாங்கான் தொகுதிக்கான பொறுப்புகளைத் தங்களுக்குள் பிரித்துக்கொள்ளவிருப்பதாக நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங் கூறியுள்ளார்.
புதிய அடித்தள ஆலோசகர் நியமிக்கப்படும்வரை அவர்கள் கெம்பாங்கான் தொகுதியைப் பார்த்துக்கொள்வர் என்றார் அவர்.
கோ பெய் மிங், டின் பெய் லிங், டயானா பாங் ஆகியோருடன் தாமும் கெம்பாங்கானில் உள்ள வெவ்வேறு பகுதிகளுக்குப் பொறுப்பு வகிக்கவிருப்பதாகச் சொன்ன திரு சியா, முக்கிய நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொள்வர் என்றார்.
கெம்பாங்கானில் நடைபெற்ற தேசிய தின மதிய விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சியா, அதுகுறித்து தெரிவித்தார்.
கெம்பாங்கான் தொகுதியை இதற்குமுன் கவனித்துக்கொண்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான முன்னாள் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராகிம் ஜூலை 20ஆம் தேதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
பெண் ஒருவருடன் பேசியதன் தொடர்பில் ஏற்பட்ட விவகாரத்தை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இணைப் பேராசிரியரான திரு ஃபைஷால் விலகினார்.
இந்நிலையில், மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் உள்ள தனது அணியை எவ்வாறு வலுப்படுத்தப்போகிறது என்பது குறித்த தகவல்களை மக்கள் செயல் கட்சி நேரம் வரும்போது அறிவிக்கும் என்று அதன் தலைவர் டெஸ்மண்ட் லீ கூறினார்.
பொதுச் சேவைக்கும் குழுத்தொகுதிக்கும் ஃபைஷால் குறிப்பிடத்தக்க விதத்தில் சேவையாற்றியிருப்பதால் அவர் இல்லாதது குறித்து குடியிருப்பாளர்களிடையே கவலை இருக்கும் என்பதை திரு சியா சுட்டினார்.
இதற்கிடையே, குழுத்தொகுதியில் உள்ள மலாய், முஸ்லிம் அடித்தளத் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அதில், முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் புதிய தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகமது கலந்துகொண்டதையும் சியா குறிப்பிட்டார்.
விருந்தின்போது மரீன் பரேட் - பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியிலும் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியிலும் வசித்துவரும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோருக்கான ‘வீ கேர் வீல்ஸ்’ என்ற மருத்துவப் போக்குவரத்து நிரப்புத்தொகைத் திட்டம் குறித்தும் சியா அறிவித்தார்.
அதன் மூலம் 11,000 மூத்தோர் பயனடைவர். ஒவ்வொரு மாதமும் குடியிருப்பாளர்கள் $50 வரையிலான போக்குவரத்துத் தொகையைப் பெறுவர்.
மருத்துவமனைகள், பலதுறை மருந்தகங்கள், பொதுநல மருந்தகங்கள், பல் மருந்தகங்கள் போன்றவற்றுக்கு அவர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

