தைவானில் கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் காணாமற்போன சிங்கப்பூர் ஆடவரின் உடற்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திரு சிம் ஹுவீ கொக், அவரது மனைவி நியோ சியூ சூ இருவரும் மாண்டுவிட்டதாக ஹுவாலியன் மாவட்ட நீதிமன்றம் 2024 டிசம்பரில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அவர்கள் காணாமற்போய் 200 நாள்களுக்குப் பிறகு அவ்வாறு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திரு சிம்மின் உடற்பாகங்களை ஜனவரி 11ஆம் தேதி வுஜியான்வு எனுமிடத்துக்கு அருகே விவசாயி ஒருவர் கண்டெடுத்ததாக தைவானியச் செய்தி ஊடகமான சைனா டைம்ஸ் தெரிவித்துள்ளது.
திரு சிம்மும் அவரது மனைவியும் கடைசியாகக் காணப்பட்ட தரோகோ தேசியப் பூங்காவின் ஷகடாங் நடைபாதையிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அந்த விவசாயி திரு சிம்மின் உடற்பாகங்களைக் கண்டதாக அது கூறியது.
எலும்புத் துண்டு ஒன்றைக் கண்ட விவசாயி உடனடியாக அதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவலளித்தார்.
உள்ளூர்க் காவல்துறையினரும் தடயவியல் குழுவினரும் இணைந்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தில் அந்த எலும்பை வெளியே எடுத்தனர். அது மனித இடுப்பெலும்பின் ஒரு பகுதி என்று கருதப்பட்டது.
பின்னர் சிம் தம்பதியின் மகனிடமிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், அது திரு சிம்மின் எலும்பு என்பதை ஜனவரி 24ஆம் தேதி வெளியான மரபணுச் சோதனை முடிவுகள் உறுதிசெய்தன.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், காவல்துறை எலும்பு கண்டெடுக்கப்பட்ட பகுதியை மீண்டும் தேடிப் பார்த்ததில் சிம் தம்பதியின் மற்ற உடற்பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

