மே 3ஆம் தேதி பொதுத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைச் சரிபார்க்கும்படி உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, தேர்தல் துறை ஆகியவை அறிவுறுத்தியுள்ளன.
பிரசாரம் என்ற பெயரில் வரும் தகவல்களில் வெளிநாட்டுத் தலையீடுகளோ மறைமுகமான உள்நோக்கங்களோ இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து அவற்றைப் பகிரும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தேர்தலை முன்னிட்டு வரக்கூடிய வெளிநாட்டுத் தலையீடுகள் இணைய அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு, தேர்தல் துறை ஆகிய மூன்றும் இணைந்து (ஏப்ரல் 19) கூட்டறிக்கையை வெளியிட்டன.
வெளிநாடுகளில் அத்தகைய சம்பவங்கள் நடப்பதால் சிங்கப்பூர் விதிவிலக்கு அல்ல என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
சிங்கப்பூர்த் தேர்தலின் முடிவு சிங்கப்பூரர்களால் முடிவெடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். நமது தேர்தல் நடைமுறைகளின் நேர்மையைப் பாதுகாக்கவேண்டும் என்றும் கூட்டறிக்கை குறிப்பிட்டது.
வெளிநாட்டுத் தலையீடுகளைக் கண்டறிந்து அவற்றை முறியடிக்க அவர்கள் எந்த வழிகளில் தேர்தலில் தலையிடக்கூடும் என்பதைத் தேர்தல் துறை அதன் இணையத்தளத்தில் விளக்கியுள்ளது.
வேட்பாளர்கள் தங்கள் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு, சமூக ஊடகங்கள், தரவுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும்படியும் அறிக்கை நினைவூட்டியது.