லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கத்தில் அண்மையில் கண்ணைப் பறிக்கும் வகையில் காணப்பட்ட இளஞ்சிவப்பு நத்தை முட்டைகளை தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் (பியுபி) அகற்றியிருக்கிறது.
அக்டோபர் 4ஆம் தேதி வாராந்தர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது நீர்த்தேக்கத்தில் நத்தை முட்டைகள் பெருகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் நத்தை முட்டைகள் அகற்றப்பட்டன.
‘தங்க ஆப்பிள்’ நத்தைகள் பொதுவாக இங்குள்ள நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் கால்வாய்களில் காணப்படுகின்றன. வாரந்தோறும் அவற்றின் முட்டைகள் அகற்றப்பட்டு வருவதாக பியுபி தனது அறிக்கையில் தெரிவித்தது.
‘தங்க ஆப்பிள்’ நத்தை முட்டைகள் நீரின் தரத்தை பாதிக்காது. இருந்தாலும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நத்தைகளில் நச்சு இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அவற்றை வெறுங்கையால் தொட்டாலோ அல்லது உட்கொண்டாலோ மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நேரத்தில் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வழிகளில் விலங்குகளை விடுவிப்பது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைக்கும் என்பதை பொதுமக்களுக்கு பியுபி நினைவூட்டியது.
இதற்கிடையே ஆய்வாளரான டான் சியோங் கியட், ‘தங்க ஆப்பிள்’ நத்தை முட்டைகள் அடிக்கடி சிங்கப்பூரில் காணப்படுவதில்லை, உள்ளூர் உயிர்வாழ் சூழலில் அவற்றின் தாக்கம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

