சீனர்-மலாய் இனத்தவர்-இந்தியர்-மற்றவர்கள் (CMIO) என்னும் இனக் கட்டமைப்பை நீக்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்து உள்ளார்.
அந்த நிர்வாகக் கட்டமைப்பை விலக்குவதால் இனக் குழுக்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய முடியாத நிலை ஏற்படும் என்றார் அவர்.
வெளிநாடுகளில் அவ்வாறு செய்ததால் ஏற்பட்ட விளைவுகளை அவர் புதன்கிழமை (பிப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் சான்றாகக் காட்டினார்.
1978ஆம் ஆண்டு முதல் இனவாரியான தரவுகள் சேகரிக்கப்படுவதற்கு பிரான்ஸ் விதித்த தடையை அவர் எடுத்துரைத்தார்.
அதனால், பிரான்சில் இனப் பதற்றங்கள் நீடிப்பதாகவும் இனம் தொடர்பான குற்றங்கள் அண்மைய ஆண்டுகளில் அங்கு அதிகரித்ததாகவும் திரு சண்முகம் தமது உரையில் குறிப்பிட்டார்.
“இனத் தரவு சேகரிப்பைத் தடை செய்ததுதான் தற்போதைய இனச் சூழலுக்குக் காரணம் என சட்டென்று நாம் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஆயினும், பலதரப்பட்ட, சிக்கலான பிரச்சினைக்கு இருக்கும் உதாரணங்களில் அதுவும் ஒன்று என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
“இனம் அடிப்படையிலான தரவுகள் இல்லாமற்போனால் வெவ்வேறு இனங்கள் சந்திக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் பற்றி புரிந்துகொள்ளவும் அளவிடவும் இயலாது என்பது அரசாங்கத்தின் கருத்து என்றார் அவர்.
“நமது பலதரப்பட்ட கலாசாரப் பண்புகள் மற்றும் பல இனவாதம் தொடர்பாக நாம் பெற்றிருக்கும் தரவுகளும் கட்டமைப்புகளும் நமக்கு இதுவரை நல்ல பலனைத் தந்துள்ளன,” என்றார் திரு சண்முகம்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசினார்.
சீனர்-மலாய் இனத்தவர்-இந்தியர்-மற்றவர்கள் (CMIO) நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்யும் திட்டங்கள் எதுவும் அரசாங்கத்திடம் உள்ளனவா என்றும் அத்தகைய மறுஆய்வின் தன்மை என்ன என்றும் அவர் கேட்டிருந்தார்.
பல்லின கலாசார முறை என்பதை சுதந்திர காலத்துக்கு முன்பிருந்தே மசெக அரசாங்கம் பின்பற்றி வருகிறது. காலத்திற்கேற்ப அது பொருந்தும் சூழல் குறித்து அண்மைய ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
அதிகரித்து வரும் சிங்கப்பூரின் சிக்கலான பல கலாசாரப் போக்குகளைப் பிரதிபலிக்கும் விதமாக அது தொடர்ந்து மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஜனவரி மாதம் நடைபெற்ற கொள்கை ஆய்வுக் கழக மாநாட்டில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியிருந்தார்.