தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஜிஎஸ்டி நீக்கம் தீர்வன்று: டெஸ்மண்ட் லீ

3 mins read
171734b6-99ac-45f2-8e28-0b06f70991ea
$800க்குக் குறைவான தனிநபர் வருமானம் ஈட்டுவோருக்கு மாதந்தோறு 14 உணவுப் பொருள்களை வழங்கும் ‘ஃபுட் ஃபிராம் தி ஹார்ட்’ சமூகக் கடையில் குடியிருப்பாளர்களுடன் ஏப்ரல் 25ஆம் தேதி உரையாடும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

குறைந்த, நடுத்தர வருமானத்தினருக்கு உதவுவதற்கு, அவர்களுக்கென வகுக்கப்பட்ட உதவித் திட்டங்கள் தேவையே தவிர, ஒட்டுமொத்தமாக பொருள், சேவை வரியைக் (ஜிஎஸ்டி) குறைப்பது தீர்வன்று என்றார் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ.

வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் மசெக வேட்பாளர்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 25) காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு குறித்து அவர் பேசினார்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு அரசாங்கம் ஜிஎஸ்டியை நீக்கவேண்டும் என்ற கருத்துக்கு அவர் பதிலளித்தார்.

Watch on YouTube

“அப்படிச் செய்தால் வெளிநாடுகளிலிருந்து வரும் வசதி உடையோரிடமிருந்தும் அதிக பொருள்களை வாங்குவோரிடமிருந்தும் வரியை வசூலிக்காமல் இருக்கவேண்டியிருக்கும்.

“மேலும், அத்தியாவசியப் பொருள்களிலேயே வெவ்வேறு சின்னங்கள், வெவ்வேறு விலையுடைய பொருள்கள் உண்டு. சிலவற்றின் விலை கூடுதலாக இருந்தாலும் தள்ளுபடியில் விற்கப்படலாம். அதனால், ஒவ்வொரு கடையையும் பொருளையும் பார்த்து வரி நீக்கத்துக்கு அவற்றைத் தேர்ந்தெடுப்பது சவாலாக இருக்கும்,” என்றார் அமைச்சர் லீ.

வரிகள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்ட மற்ற நாடுகளில் வசதியானோரே அதிகம் பயனடைந்துள்ளதையும் அவர் சுட்டினார்.

“மூப்படையும் சமூகத்தை ஆதரிக்க போதிய வளங்கள் இருப்பதன் முக்கியத்துவம் பற்றிப் பிரதமர் நேற்றுகூட (வியாழக்கிழமை) பேசியிருந்தார். முதியோர் வயதாகும்போது அவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவழிக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். அத்திட்டங்களுக்கு பொறுப்பான, நிலைத்தன்மையான முறையில் நாம் நிதி திரட்டவேண்டும்,” என்று அமைச்சர் லீ விளக்கினார்.

“விலைவாசி உயர்வைச் சமாளிக்க ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுகள் போன்ற பல்வேறு திட்டங்களால் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குக் கணிசமான ஆதரவு கிடைக்கிறது. அதேசமயம் சுற்றுப்பயணிகள், வெளிநாட்டவர், வர்த்தகங்களிடமிருந்து நம்மால் வரித்தொகையைப் பெற்று சராசரி சிங்கப்பூரர்களுக்கு உதவ முடிகிறது,” என்றார் அவர்.

பொருளியல், தற்காப்புத் துறைகளைவிட சமூகத்தின்மீதே அரசாங்கம் அதிகம் செலவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விலைவாசி உயர்வைச் சமாளிக்க சமூக அளவில் வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதியில் அறிமுகமாகியுள்ள பல்வேறு திட்டங்கள் பற்றியும் கல்வி, நிதி மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ‌‌‌ஷான் ஹுவாங்கும் டாக்டர் ஹமீது ரசாக்கும் பேசினர்.

“ஜேஎஸ் கேர்ஸ் எனும் திட்டம்வழி காய்கறிப் பைகள், வீட்டுப் பொருள்களை மக்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று மற்ற குடும்பங்களுக்கு நாங்கள் நன்கொடை அளிக்கிறோம்,” என்றார் டாக்டர் ரசாக்.

‘ஃபுட் ஃபிராம் தி ஹார்ட்’ சமூகக் கடை, நன்யாங் ‘உணவுப் பெட்டி’ (Food Locker), ‘100=50’ எனப் பாதி விலையில் உணவுப் பொருள் விநியோகத் திட்டம் போன்ற முயற்சிகள் பற்றி திரு ஹுவாங் பேசினார்.

‘ஃபுட் ஃபிராம் தி ஹார்ட்’ சமூகக் கடையில் தொண்டூழியருடன் உரையாடும் டாக்டர் ஹமீது ரசாக் (இடது).
‘ஃபுட் ஃபிராம் தி ஹார்ட்’ சமூகக் கடையில் தொண்டூழியருடன் உரையாடும் டாக்டர் ஹமீது ரசாக் (இடது). - படம்: ரவி சிங்காரம்

வேலை நிலைத்தன்மை

தங்கள் வருமானம் உயருமா, ஆட்குறைப்பு செய்யப்படுமா எனப் பல குடியிருப்பாளர்களும் கவலைப்படுவதாகச் சொன்ன அமைச்சர் லீ, பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து வேலை நிலைத்தன்மை முயற்சிகளை தாங்கள் முன்னெடுக்கவுள்ளதாகக் கூறினார்.

“காய்கறி, பொருள்களைப் பெறும் அதே சமயத்தில், வேலைவாய்ப்பு குறித்தும் ஆலோசனை வழங்க வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்துடன் (e2i) இணைந்து முயற்சி எடுக்கிறோம்,” என்றார் டாக்டர் ரசாக்.

“முதியோருக்கென அன்றாடம் இரண்டு மணி நேரம் செய்யக்கூடிய வேலைகளை வழங்க விரும்புகிறோம். சிறப்புத் தேவை உடையோருக்காக வேலைகளை மறுவடிவமைக்க, நிறுவனங்களுடன் இணைந்து செய்லபட்டு வருகிறோம்,” என்றார் திரு ‌‌‌ஹுவாங்.

குறிப்புச் சொற்கள்