குட்மன் கலை மையத்திற்கான வாடகை உயர்வு தள்ளிவைப்பு

குட்மன் கலை மையத்திற்கான வாடகை உயர்வு தள்ளிவைப்பு

2 mins read
ba223154-b785-4e82-aa0f-4e143b405d96
60 விழுக்காட்டு வாடகை உயர்வால் 24 வாடகைதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குட்மன் கலை மையத்தின் வாடகைக் கட்டணங்களைத் தேசிய கலைகள் மன்றமும் ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமமும் 2027ஆம் ஆண்டின் இறுதியில் மறுஆய்வு செய்யும் என்று கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் பே யாம் கெங் தெரிவித்துள்ளார்.

நீண்டகால நிலைத்தன்மைக்கான கட்டண உயர்வு குறித்து வாடகைதாரர்களுடன் குழுமக் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ள போதிலும், மத்திய கிழக்குப் பூசலால் அதிகரித்துள்ள தற்போதைய பொருளியல் நிச்சயமற்ற காலகட்டத்தில் கலைத்துறை வாடகைதாரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 2026ல் கட்டண உயர்வுகளை அந்த அமைப்பு ஒத்திவைக்கும் என்றும் அவர் கூறினார்.

குட்மன் கலை நிலையத்தில் வாடகைதாரர்கள் அதிகரித்து வரும் வாடகைக் கட்டணங்களைச் சமாளிக்க உதவும் நடவடிக்கைகள் பற்றி  திரு பே, மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி கோ ஸி கீ எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது கூறினார்.

கலைத்துறையினருக்குக் கட்டுப்படியாகக்கூடிய, எளிதில் அணுகக்கூடிய பணியிடங்களை உறுதி செய்வதற்கான திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். 

2026 டிசம்பர் முதல் 2027 டிசம்பர் வரை மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தப்படவுள்ள 60 விழுக்காட்டு வாடகை உயர்வால் 24 வாடகைதாரர்கள் பாதிக்கப்படுவர். 

சந்தை விகிதங்களைக் காட்டிலும் குறைந்த கட்டணங்களைக் கொண்ட, மானியம் பெற்றுள்ள கலைத்துறை வளாகமான குட்மன் கலை நிலையத்தில் 77 வாடகை இடங்கள் உள்ளன.

நிலையத்திலுள்ள கலையரங்குகளுக்கான கட்டணங்கள் கடைசியாக 2012ல் மறுஆய்வு செய்யப்பட்டன. 

அதன் பின்னர், நிலையத்தின் நிர்வாக அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமம் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைத் தாமே ஏற்றுக்கொண்டுள்ளதாக திரு பே கூறினார்.

தேசிய கலைகள் மன்றமும் இத்துறையின் நீண்டகாலத் தேவைகளை ஆராய்ந்து வருவதாகத் திரு பே குறிப்பிட்டார்.

அத்துடன், இடத்திற்கான தேவைகள், கலைசார்ந்த இடங்களின் கட்டுப்படியாகக்கூடிய தன்மை ஆகியவை குறித்துக் கலைத்துறையினருடன் அது கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

“எதிர்காலத்திற்காகத் திட்டமிடுகையில், கலைஞர்களுக்கும் கலைக் குழுக்களுக்கும் கலைசார்ந்த இடங்கள் தொடர்ந்து எளிதில் அணுகக்கூடியதாகவும் கட்டுப்படியாகக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய தேசிய கலைகள் மன்றம் நடவடிக்கை எடுக்கும்,” என்று திரு பே தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்