2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரில் தொழில்துறை இடங்களுக்கான வாடகை விகிதங்கள் மற்றும் விலைகள் அதிகரித்துள்ளன. வாடகை ஆண்டு அடிப்படையில் 2.3 விழுக்காட்டும் காலாண்டு அடிப்படையில் மிதமான அளவில் 0.4 விழுக்காடும் உயர்ந்துள்ளன.
வியாழக்கிழமை (ஏப்ரல் 23) ஜேடிசி வெளியிட்ட தரவுகளின்படி, சிங்கப்பூரில் தொழில்துறை இடங்களுக்கான விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 4.6 விழுக்காடும் காலாண்டுக்கு காலாண்டு 1.2 விழுக்காடும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் விலைக் குறியீட்டில் ஏற்பட்ட 1.4 விழுக்காடு காலாண்டு அதிகரிப்பைவிட சற்று குறைவு.
சிங்கப்பூர் ஒரு முக்கிய வட்டாரத் தளவாட மையமாக இருக்கும் நிலையில், ஈரானில் நடைபெறும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நிலையற்றதன்மையால் தொழில்துறை சொத்துச் சந்தைக்கு ஒரு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் வேளையில் இந்தச் செயல்பாடு அமைந்துள்ளது என்று Mogul.sgயின் தலைமை ஆய்வு அதிகாரி நிக்கலஸ் மாக் கூறினார்.
“ஒட்டுமொத்த தொழில்துறை சொத்து வாடகைக் குறியீட்டின் 0.4 விழுக்காடு அதிகரிப்பு (முதல் காலாண்டில்), முந்தைய 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏற்பட்ட 0.5 விழுக்காடு உயர்வைவிடச் சற்று மெதுவானது,” என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, முதல் காலாண்டில் கிடங்குகளுக்கான வாடகை காலாண்டு அடிப்படையில் 0.2 விழுக்காடு உயர்ந்துள்ளதையும் இது 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் ஏற்பட்ட 1.1 விழுக்காடு அதிகரிப்பைவிட மெதுவானது என்பதையும் மாக் சுட்டிக்காட்டினார்.
ஈரான் போர் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், முதல் காலாண்டில் கிடங்குகளுக்கான வாடகைகளில் ஏற்பட்டுள்ள மெதுவான வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன என்று அந்த ஆய்வாளர் கூறினார். கிடங்கு வாடகையானது, பொதுவாகத் தளவாடங்கள் மற்றும் தொழில்துறை இடங்களுக்கான ஓர் அளவீடாகக் கருதப்படுகிறது.

