தனியார் உரிமையாளர்களுக்குச் சொந்தமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) கடைகளின் வாடகை கடந்த ஓராண்டில் இரு மடங்கிற்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது.
வீவகவிடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ள கடைகளின் வாடகை சீராக உள்ளது.
வீவக குடியிருப்புப் பேட்டைகளில் தனியார் உரிமைத்துவ வீவக கடைகளின் சராசரி வாடகை, 2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சதுர அடிக்கு $3.51ஆக இருந்தது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அது சதுர அடிக்கு $7.34ஆக ஏற்றம் கண்டது.
தனியார் உரிமையாளர்களுக்குச் சொந்தமான வீவக கடைகளின் வாடகை விகிதத்தில் இதுவே ஆக அதிகம். இத்தகவலை நகர மறுசீரமைப்பு ஆணையம் வெளியிட்டது. தரவுகள் 1999ஆம் ஆண்டிலிருந்து தொடங்குபவை.
இதற்கிடையே, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் நேரடியாக வாடகைக்கு விடப்படும் கடைகளின் வாடகை சீரான முறையில் ஏற்றம் கண்டன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்து வீவக கடைகளில் ஒன்பது கடைகளின் வாடகை சொல்லிக்கொள்ளும் அளவில் மாற்றம் காணவில்லை என்று வீவக கூறியது.
வீவக கடைகள் தனியார் உரிமையாளர்களிடமிருந்து அல்லது அரசாங்கத்திடமிருந்து வாடகைக்கு எடுக்கப்படலாம். ஏறத்தாழ 8,500 வீவக கடைகள் தனியார் உரிமைத்துவம் கொண்டவை என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
எஞ்சியுள்ள 7,000 கடைகளை அரசாங்கம் நேரடியாக வாடகைக்கு விடுகிறது.
வீவக கடைகளைத் தனியார் உரிமையாளர்களிடம் விற்பதை வீவக 1998ஆம் ஆண்டில் நிறுத்தியது.