15,200 உணவங்காடி, சந்தைக் கடைகளுக்கு $1,200 வரை வாடகை ஆதரவு

15,200 உணவங்காடி, சந்தைக் கடைகளுக்கு $1,200 வரை வாடகை ஆதரவு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Jul 2026 - 7:14 pm

2 mins read

மத்திய கிழக்குப் பூசல்களால் ஏற்பட்ட செலவின உயர்வைச் சமாளிக்க உணவங்காடிக் கடைகள், சந்தைகளில் செயல்படும் கடைகள், வாடகை தொடர்பில் ஆதரவைப் பெறவிருக்கின்றன.

சமைத்த உணவை விற்கும் கடைகள் $1,200யும் சந்தைக் கடைகள் $600யும் பெறும். செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரை ஆறு மாதகாலத்தில் இத்தொகை வழங்கப்படும். 6,900 உணவுக் கடைகள், 8,300 சந்தைக் கடைகள் என மொத்தம் 15,200 கடைகளுக்கு இந்த ஆதரவுகள் கிடைக்கும்.

உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலால் எழுந்துள்ள செலவின அழுத்தத்தைச் சமாளிக்க, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கான இரண்டாம் கட்ட ஆதரவை அறிவித்தார் வர்த்தக, தொழில்துறை மற்றும் கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் லோ யென் லிங்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்த அவர், செலவினம் அதிகரித்திருப்பது குறித்து கடைக்காரர்கள் கடந்த சில மாதங்களாக கவலை தெரிவித்து வருவதைச் சுட்டினார்.

இந்த ரொக்க ஆதரவு, மூலப்பொருள்கள், செப்பனிடுதல், பயனீட்டு தொடர்பில் பெருகிவரும் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தாலும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளாலும் நிர்வகிக்கப்படும் சந்தைகளிலும் உணவங்காடிகளிலும் செயல்படும் கடைகள் இதற்குத் தகுதிபெறும். இதுகுறித்த விவரங்கள், தொடர்புடைய அமைப்புகள் மூலம் கடைக்காரர்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

உணவங்காடிக் கலாசாரத்தைத் தக்கவைப்பதுடன், உணவங்காடி நிலையங்களையும் சந்தைகளையும் நிர்வகிப்பதில் அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்பையும் இந்த ஆதரவு நடவடிக்கைகள் வெளிப்படுத்துவதாக திருவாட்டி லோ சொன்னார்.

உணவங்காடிகளிலும் கடைகளிலும் விலையேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவை வெளிப்படையான முறையில் அமைவதை சிங்கப்பூர்ப் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையமும் சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கமும் உறுதிசெய்யும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்