கேலாங் சிராய் ரமலான் சந்தை கடைக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு அதிகபட்ச வாடகைக் கட்டணம் $15,000ஆக இருக்கும் என்று உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஆண்டின் கேலாங் சிராய் ரமலான் சந்தைக்கு, விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விலை மேலும் கட்டுப்படியாக இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கிறோம்,” என்று இணைப் பேராசிரியர் ஃபைஷல் ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதிவரை நீடித்த இவ்வாண்டின் ரமலான் சந்தையில் 700க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டன.
வாடகைச் செலவுகள் அதிகமாக இருந்தது குறித்து கடைக்காரர்கள் புகார் செய்ததாக கடந்த மார்ச் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.


