எஸ்எம்ஆர்டியின் செலவுகளை ஆராய்ந்த பிறகு அபராதம் விதிக்கப்பட்டது

2 mins read
d2382741-a4de-4ace-80e6-46ba04df015c
கிழக்கு மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட ஆறு நாள் சேவை தடையால் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் பயணிகள் பாதிக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதிக்கு 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கிழக்கு மேற்கு ரயில் பாதையின் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

அந்நாள்களில் பயணிகளுக்கு உதவும் விதமாக பூன் லே - ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையங்களுக்கு இடையிலும் குயீன்ஸ்டவுன் - புவன விஸ்தா ரயில் நிலையங்களுக்கும் இடையிலும் தற்காலிக ரயில் சேவை மற்றும் இலவசப் பேருந்து சேவைகளும் வழங்கப்பட்டன.

இந்த மாற்றுச் சேவை ஏற்பாடுகளுக்காகவும் ரயில் தடம் சரிபார்ப்பு பணிகளுக்காகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் 10 மில்லியன் வெள்ளிக்கு மேலாகச் செலவுகள் செய்தது.

இந்நிலையில், ரயில் சேவை தடங்கல் குறித்து விசாரணை நடத்திய நிலப் போக்குவரத்து ஆணையம் எஸ்எம்ஆர்டி நிறுவனத்திற்கு 3 மில்லியன் வெள்ளி அபராதம் விதிப்பதாகச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) அறிவித்தது.

ரயில் சேவைத் தடங்கலின்போது எஸ்எம்ஆர்டி நிறுவனம் செய்த செலவுகளை ஆராய்ந்த பிறகுதான் அதற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் விளக்கமளித்துள்ளது.

சேவைத் தடை ஏற்பட்ட போதிருந்த சூழ்நிலையை வைத்து அபராதம் விதிக்கப்பட்டதாக விசாரணையின் முடிவில் ஆணையம் குறிப்பிட்டது.

அபராதத் தொகை பொது போக்குவரத்து நன்கொடை நிதிக்குச் செலுத்தப்படும் என்றும் அது குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பத்தினரின் போக்குவரத்து செலவுகளுக்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சேவைத் தடையின் போது எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தி தரும் விதமாக இருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

சேவைத் தடையின் போது முதல் சில மணி நேரம் குழப்பத்தில் இருந்த எஸ்எம்ஆர்டி அதன்பின்னர் நிலைமையை அறிந்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்ததாக ஆணையம் குறிப்பிட்டது.

கிழக்கு மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட ஆறு நாள் சேவை தடையால் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

சேவைத் தடங்கள் காரணமாகத் தற்போது எஸ்எம்ஆர்டிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை அதன் இரண்டாவது ஆகப் பெரிய அபராதமாகும்.

இதற்கு முன்னர் 2015ஆம் ஆண்டு வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் ஏற்பட்ட சேவைத் தடங்களுக்கு எஸ்எம்ஆர்டிக்கு 5.4 மில்லியன் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்