பொது இடத்தில் குடிபோதையில் இருந்தது, ஆயுதம் வைத்திருந்தது போன்ற குற்றப் பின்னணி கொண்ட ஒரு தொடர் குற்றவாளி, சிறையிலிருந்து விடுதலையான நான்கு மாதங்களிலேயே 2024 டிசம்பரில் ஒருவரைக் கடுமையாகத் தாக்கினார்.
தனிப்பட்ட ஒரு விவகாரத்தால் வருத்தத்துடன் இருந்த ஜூனியர் டான் யோங் ஷெங், 27, மது அருந்தியிருந்தார். 2024 டிசம்பர் 7ஆம் தேதி, ஐஸ் கட்டிகளை எடுக்க உதவும் உலோகத்தாலான இடுக்கியால், முன்பின் தெரியாத 31 வயது ஆடவரின் முகத்தில் டான் குத்தினார். இதனால் அந்த ஆடவருக்கு மேல்தாடை எலும்பில் முறிவு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டன.
பிரச்சினையைவிட்டு விலகியிருக்க வேண்டிய தண்டனைக்காலக் குறைப்பு ஆணையின்கீழ் இருந்தபோது டான் இந்தக் குற்றத்தைப் புரிந்தார்.
வேண்டுமென்றே கடும் காயத்தை ஏற்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கப்பூரரான டானுக்கு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 30) ஒன்பது மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்காலக் குறைப்பு ஆணையை மீறியதற்காக டான் கூடுதலாக ஏழு நாள் சிறையில் இருக்க வேண்டும்.
குற்றம் நிகழ்ந்தபோது, ரோச்சோர் கேனல் சாலைக்கு அருகில் உள்ள பிரின்செப் ஸ்திரீட்டில் உள்ள மதுபானக்கூடத்தில் மதுபானம் பரிமாறுபவராக டான் வேலை செய்து வந்ததாக அரசாங்க வழக்கறிஞர் லு ஹுயீ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2024 டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் தமது வேலையிடத்திலிருந்து புறப்பட்ட டான், சுற்றுப்புறத்தில் அந்த ஆடவரையும் அவருடைய நண்பர்களையும் பார்த்தார்.
“குற்றஞ்சாட்டப்பட்டவர், அந்தக் குழு தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகக் கருதினார். தமது வேலையிடத்துக்குத் திரும்பிய அவர், ஒரு ஜோடி இடுக்கியை எடுத்து தமது சட்டைக்குள் மறைத்துக்கொண்டு அந்தக் குழுவை நோக்கிச் சென்றார். அவர் அந்த இடுக்கியை எடுத்து, பாதிக்கப்பட்டவரின் முகத்தில் ஒருமுறை குத்தினார்,” என்று வழக்கறிஞர் லு கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை, ஆனால், பாதிக்கப்பட்டவர் பின்னர் டான் டோக் செங் மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது அங்கு கண்டறியப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களுக்காக தையல் போடவும் வேண்டியிருந்தது.
டான் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

