தொடர் குற்றவாளியான 54 வயது ஜஸ்விந்தர் சிங், 2014ல் பலமுறை சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். 2020 மார்ச் மாதத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் கிரவுன் பிளாசா சாங்கி விமான நிலைய ஹோட்டலில் தரையில் எச்சில் உமிழ்ந்து 'கொரோனா, கொரோனா' என கத்திய சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்தது.
அதற்காக அவர் 2020 ஏப்ரலில் இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாண்டு ஆகஸ்ட்டில் சிகிச்சை பெறுவதற்காக சாங்கி பொது மருத்துவமனைக்குச் சென்ற அவர், அங்கு பணியில் இருந்த துணைக் காவல்துறை அதிகாரியின் கழுத்தில் இருந்த அடையாளப் பட்டையைப் பிடித்து இழுத்ததுடன் மேலும் சில முரட்டுத்தனமான செயல்களைப் புரிந்தார்.
அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர் மது அருந்தியிருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்தக் குற்றங்களுக்காக சிங்குக்கு புதன்கிழமை (டிசம்பர் 21) ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

