உடற்குறையுள்ளோரிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வது சிங்கப்பூரில் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிடங்களில் நேர்மறை மனப்பான்மை குறைந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என்று அறியப்படுகிறது.
2023ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் 68.9 விழுக்காட்டினர் உடற்குறையுள்ளோரிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டில் இது 76.8 விழுக்காடாக இருந்தது.
குறிப்பாக, வேலையிடங்களில் உடற்குறையுள்ளோரிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வோர் விகிதம் சரிந்துவிட்டதாக தேசிய சமூக சேவை மன்றம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டில் வேலையிடங்களில் உடற்குறையுள்ளோரிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொண்டோர் விகிதம் 59.6 விழுக்காடாக இருந்தது.
இது 2023ஆம் ஆண்டில் 50.6 விழுக்காடாகக் குறைந்தது.
ஏறத்தாழ 2,000 சிங்கப்பூர்வாசிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கல்வி, வேலை வாய்ப்பு, பொது இடங்களில் உடற்குறையுள்ளோர் குறித்து அவர்களது கருத்து தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
பொதுமக்கள் மனப்பான்மை தொடர்பான ஆய்வு 2019ஆம் ஆண்டிலும் 2023ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்டது.
அவற்றின் முடிவுகள் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு முதன்முறையாக வெளியிட்ட உடற்குறை போக்கு அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டன.
இந்த அறிக்கை டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோர் வேலை வாய்ப்பு விகிதத்தை 2030க்குள் 40 விழுக்காட்டுக்கு உயர்த்த முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் ஏறத்தாழ 4,500 உடற்குறையுள்ளோர் பணியமர்த்தப்பட்டிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை வாய்ப்பு, வாழ்க்கைத் தரம், பராமரிப்பாளர் ஆதரவு, பொதுமக்கள் மனப்பான்மை போன்ற அம்சங்களில் உள்ள முக்கிய போக்குகளை அமைச்சு வெளியிட்ட அறிக்கை காட்டியது.
பார்வையற்றவர்கள், செவித்திறன் இல்லாதோர் போன்றவர்களிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வோர் எண்ணிக்கை 80.9 விழுக்காட்டிலிருந்து 72 விழுக்காடாகக் குறைந்துவிட்டதை ஆய்வின் மூலம் அறிய முடிந்தது.
அறிவுத்திறன் குறைபாடு உள்ளோரிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வோர் விகிதம் 68.4 விழுக்காட்டிலிருந்து 57.3 விழுக்காடாகக் குறைந்தது.
ஆட்டிசம் எனும் தொடர்புத்திறன் குறைபாடு உள்ளோரிடம் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வோர் விகிதம் 69.9 விழுக்காட்டிலிருந்து 56.2 விழுக்காடாகக் குறைந்தது.

