சாங்கிக் கண்காட்சி நிலையத்தில் நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையும் இம்முறையும் பங்கேற்கிறது.
ஈராண்டுக்கு ஒரு முறை இடம்பெறும் விமானக் கண்காட்சி, இந்த முறை பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எஃப்16சி போர் விமானம், ஏஹெச் 64 அபாச்சி ஹெலிகாப்டர் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆகாயச் சாகசங்களை ஒருசேர கண்டுகளிக்க வாய்ப்பளிக்கிறது விமானக் கண்காட்சி.
எஃப்16சி போர் விமானம், ஏஹெச் 64 அபாச்சே ஹெலிகாப்டர் ஆகிய இரண்டும் மொத்தம் ஆறு முறை மிகவும் நெருக்கமாகப் பறந்துசென்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தவிருக்கின்றன.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை முன்வைக்கும் 17 போர் விமானச் சாகசப் படைப்புகளில் மூன்று புதியவை. பிப்ரவரி 7ஆம் தேதி காலை 11 மணிக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 4 மணிக்கும் அந்த மூன்று புதிய சாகசங்களைக் காணலாம்.
ஒவ்வொரு சாகசத்தையும் சரிவர செயல்படுத்த ராணுவ வீரர்கள் பல மாதங்கள் கடுமையாக உழைத்தனர் என்று சிங்கப்பூர் குடியரசு ஆயுதப் படையின் பறக்கும் கண்காட்சிக் குழுவின் தலைவர் கர்னல் இங் ஹன் லின் மேக்ஸ் தெரிவித்தார்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் சிங்கப்பூர் ஆகாயப் படை பத்தாவது முறை பங்கெடுப்பதைப் பிரதிபலிக்க வீரர்கள் அனைவரும் புகை போன்ற சாகச அம்சங்கள் கொண்ட விமானி உடைகளை அணிவர் என்றும் திரு இங் கூறினார்.
முதன்முறையாகக் கண்காட்சியில் பங்கேற்கிறார் எம்இ1 லட்சுமி அர்செனோ தானேஷ், 33. கடந்த ஆண்டு அக்டோபரிலிருந்து பயிற்சி பெற்றுவரும் தானேஷ், சிக்கலான சில சாகசங்களைப் பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் எளிமையாகப் படைக்க பயிற்சிகளை மேற்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
கண்காட்சியில் 10 விதமான சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும். பார்வையாளர்கள் அவற்றை நேரடியாகக் காணலாம். விமானத்தை இயக்கும் ஆகாயப் படை வீரர்கள், வீராங்கனைகளுடன் பேசலாம், நிழற்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
எஃப்15எஸ்ஜி ரக, எஃப்16சி ரக போர் விமானங்கள், ஏஹெச்64டி அபாச்சி ஹெலிகாப்டர், ஹெச்225எம் ஹெலிகாப்டர், சிஹெச்47எஃப் ஹெலிகாப்டர், எஸ்70பி சீஹால்க் ஹெலிகாப்டர், ஏ330 பலபயன் விமானம் ஆகியவற்றைக் குறித்தும் பொதுமக்கள் விமானக் கண்காட்சி வழி தெரிந்துகொள்ள முடியும்.

