வேலைச் சந்தையில் பட்டங்களுக்கும் பதவிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நடைமுறையை மாற்றி, வேலை தேடுவோரின் உண்மையான திறன்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் தொடர்பான முடிவுகளில் திறமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூர்வாசிகளுக்கு அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு, ஊழியர்களின் திறன்களை நிறுவனங்கள் அடையாளம் காணவும் மேம்படுத்தவும் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுகின்ற 12 முன்னோடித் திட்டங்களைச் ‘செயல்பாட்டிற்கான திறன்களுக்கே முன்னுரிமை’ எனும் கட்டமைப்பு முன்மொழிகிறது. இந்தத் திட்டத்தைப் ‘பெரியோர் கல்விக்கான நிலையம்’ திங்கட்கிழமை (அக்டோபர் 19) அறிமுகப்படுத்தியது.
முதலாளிகள் வழக்கமாக வேலைக்கு விண்ணப்பிப்போரைப் பற்றிய மதிப்பீட்டை அவர்களின் முந்தைய பணிப் பொறுப்புகள், கல்வித் தகுதிகளைக் கேட்பதன் மூலமே தொடங்குவதாகத் தற்காலிக மனிதவள அமைச்சர் ஜாஸ்மின் லாவ் கூறினார். சேண்ட்ஸ் எக்ஸ்போ மாநாட்டு நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
“இத்தகைய தகவல்கள், ஒருவர் எங்கு இருந்திருக்கிறார் என்பதைப் பற்றி மட்டுமே அதிகம் வெளிப்படுத்துகின்றனவே தவிர, அவரால் எந்த அளவுக்கு உயரமுடியும் என்பதைப் பற்றி அல்ல,” என்று அவர் கூறினார்.
அதற்குப் பதிலாக, “திறன்களுக்கே முன்னுரிமை” என்ற அணுகுமுறை, ஊழியர்களால் என்ன செய்ய முடியும், அடுத்துச் செய்ய வேண்டியவற்றுக்கு அவர்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும் என்ற கேள்விகளை முன்வைக்கும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சருமான திருவாட்டி லாவ் தெரிவித்தார்.
இத்தகைய நடைமுறைகள் புதியவை அல்ல என்றாலும் வேலைகள் உருமாற்றம் பெற்றுவருவது, திறன்கள் விரைவாகப் காலாவதியாவது, தொழில் மாற்றங்கள் அதிகரித்துவருவது ஆகிய சூழல்களில் இவை தற்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், செயற்கை நுண்ணறிவு இந்த மாற்றங்களை மேலும் விரைவுபடுத்தும் என்றும் அவர் கூறினார்.
நிலையம், தொழில்துறை சார்ந்தவர்களுடன் ஈராண்டுகளுக்கு ஆய்வும் கலந்தாலோசனைகளும் மேற்கொண்டது. பின்னர், திறன், ஊழியர் அணி மேம்பாட்டு அமைப்பு, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அது இந்தக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
