சிராங்கூன் ஆற்றின் வனப்பகுதியில் விரிவான ஆய்வு நடத்த கோரிக்கை

2 mins read
70cb3e7e-c6d6-407e-87e1-e0020cfb7feb
சிராங்கூன் ஆற்றுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் 138 தாவர வகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் கிழக்கு வட்டாரத்தில் பச்சைப் பசேல் என்று இருக்கும் சிராங்கூன் ஆற்றுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்படி அங்குள்ள குடியிருப்பாளர்களும் இயற்கை ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

வனப்பகுதியில் புதிய பேருந்துப் பணிமனை அமையவிருப்பதை முன்னிட்டு அந்தக் கோரிக்கையைக் குடியிருப்பாளர்களும் ஆர்வலர்களும் முன்வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் புதிய லோரொங் ஹலுஸ் பேருந்துப் பணிமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது குடியிருப்பாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

சிராங்கூன் ஆற்றுக்கு அருகில் உள்ள வனப்பகுதியின் தாவரங்களையும் உயிரினங்களையும் குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்தப்படுகிறது.

கோனி தீவின் பூங்காவைவிட சற்று பெரிதாக இருக்கும் சிராங்கூன் ஆற்றுக்கு அருகில் உள்ள வனப்பகுதி கிட்டத்தட்ட 105 ஹெக்டர் பரப்பரளவைக் கொண்டது என சிங்கப்பூர் இயற்கை சமுதாயம் என்ற அமைப்பு தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வனப்பகுதியில் அமைப்பு நடத்திய ஆராய்ச்சி மூலம் அங்கு 138 தாவர வகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றுள் சில தாவரங்கள் அரிய வகையைச் சேர்ந்தவை.

அமைப்பு இதற்குமுன் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் சிராங்கூன் ஆற்றுக்கு அருகே 92 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பினும், பேருந்துப் பணிமனையை அமைப்பதற்குமுன் அங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பணிமனைக்கான இடத்தில் சிங்கப்பூருக்குச் சொந்தமான தாவர வகைகள் இல்லை என்றும் இயற்கைப் பகுதிகளுக்கு அருகில் இல்லை என்றும் அவர்கள் சுட்டினர்.

பேருந்துப் பணிமனையைக் கட்டுவதற்கான திட்டம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட பெருந்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. அதே ஆண்டு டிசம்பரில் பணிமனையை அமைப்பதற்கான ஒப்பந்தத்துக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் அழைப்புவிடுத்தது.

கோ பிரதர்ஸ் இகோ எஞ்சினியரிங் என்ற நிறுவனம் உருவாக்கும் பணிமனை நான்கு மாடிகளைக் கொண்டது. பணிமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும் அங்குக் குறைந்தது 550 பேருந்துகளை நிறுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
பேருந்துகட்டுமானம்இயற்கை