தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஊழியர்களை வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல இடம் ஒதுக்கும்படி முதலாளிகளுக்கு அறைகூவல்

2 mins read
0dbe7d32-3a05-425d-9b6d-408649dad44b
அப்பர் புக்கிட் தீமா சாலையில், வேலை முடிந்து தங்களை தங்குவிடுதிகளுக்கு அழைத்துச் செல்ல வாகனங்களுக்காக காத்திருக்கும் ஊழியர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வேலை முடிந்த கையுடன், நிறுவனம் ஏற்பாடு செய்த வாகனங்களுக்காக தங்கள் ஊழியர்கள் பாதுகாப்பாக காத்திருந்து, அவற்றில் ஏறுவதை முதலாளிகள் உறுதிசெய்ய வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்கள் நிலைய நிர்வாக இயக்குநரான மைக்கல் லிம், “இடர்களைக் குறைப்பதில் சிறந்த செயல்முறைகளைக் கடைப்பிடிக்குமாறு முதலாளிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்,” என்றார்.

அப்பர் புக்கிட் தீமா சாலை, உட்லண்ட்ஸ், சுவா சூ காங் ஆகிய பகுதிகளில் குடியிருப்பாளர்கள் பலரிடமிருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு கருத்துகள் கிடைத்த நிலையில், இந்த நினைவூட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான சாலைகளுக்கு அருகே தங்கள் வாகனங்களுக்காக அடிக்கடி ஊழியர்கள் காத்திருக்க வைக்கப்படுவதாக அக்குடியிருப்பாளர்கள் கூறினர்.

அப்பர் புக்கிட் தீமா சாலையிலும் உட்லண்ட்ஸ் அவென்யூ 1லும் உள்ள கட்டுமானத் தளங்களுக்கு வெளியே ஊழியர்கள் திரண்டிருந்ததை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக்குழு கண்டறிந்தது.

எனினும், பிரிக்லண்ட் சாலையில் உள்ள கட்டுமானத் தளத்தில், குறிப்பிட்ட இடங்களில் வாகனங்களிலிருந்து ஊழியர்கள் இறங்குவதைக் காண முடிந்தது.

சுவா சூ காங் அவென்யூ 3ல், எம்ஆர்டி பாதை கட்டுமானத் தளத்தில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்கள், கனரக வாகன நிறுத்துமிடத்துக்கு 200 மீட்டர் தூரம் நடந்து சென்று அங்கு வாகனங்களில் ஏறினர்.

கட்டுமானச் சேவை நிறுவனமான ‘கொரி ஹோல்டிங்ஸ்’ தலைமை நிர்வாகி ஹுய் யூ கோ, சில கட்டுமானத் தளங்களில் ஊழியர்களை ஏற்றிச் செல்ல போதுமான இடவசதி இல்லாததை ஒப்புக்கொண்டார்.

எஸ்ஏஎஸ் கட்டுமானத் திட்டத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரியான திரு ஷான் லிம், ஊழியர்களை ஏற்றிச் செல்ல குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டபோதும் சில ஓட்டுநர்கள் அவற்றைத் தவிர்ப்பதாகக் கூறினார்.

வாகனங்களுக்காக ஊழியர்கள் பாதுகாப்பாகக் காத்திருக்கவும் அவர்கள் ஏறிச் செல்லவும் முதலாளிகள் குறிப்பிட்ட இடங்களை ஒதுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் சொன்னார். தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஊழியர்கள் விழிப்புடன் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்