வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) முறையின்கீழ் ‘ஏ’, ‘பி’ வாகனப் பிரிவுகளை ஒன்றிணைப்பது, வாகனத்தின் மதிப்பிற்கேற்ப சலுகைகளையும் கூடுதல் கட்டணங்களையும் விதிப்பது போன்ற பரிந்துரைகள் நிலப் போக்குவரத்து பெருந்திட்டப் புதுப்பிற்கான நடவடிக்கையின்போது முன்வைக்கப்பட்டன.
அப்பெருந்திட்டத்துக்கான இரண்டாம் கட்ட ஆய்வுக் குழுப் பேச்சுவார்த்தையில் 400க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (ஜூலை 27) அறிக்கை மூலம் தெரிவித்தது.
சிஓஇ பிரிவுகள் எவ்வாறு வகைப்படுத்தப்படலாம் என்பது குறித்த பரிந்துரைகள் குறித்துப் பேசப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.
பரிந்துரைகள்
வாகன எடையைக் கொண்டு வகைப்படுத்துவது, தேவைக்கேற்றவாறு சிஓஇ சான்றிதழ்களை ஒதுக்குவது போன்றவை அப்பரிந்துரைகளில் அடங்கும். தேவைக்கேற்ப சிஓஇ சான்றிதழ்களை வழங்கலாம் என்ற பரிந்துரை குறிப்பாக இளம் பிள்ளைகள் இருக்கும் பெரிய குடும்பங்களுக்குப் பொருந்தும்.
வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கென ஒரு பிரிவை உருவாக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
பல கார்களை வைத்திருப்போருக்குக் கூடுதல் கட்டணம் விதிப்பது, சிஓஇ கட்டமைப்பின்கீழ் பொதுப் பிரிவான ‘இ’ பிரிவை விலக்குவது ஆகிய பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
‘இ’ பிரிவு பொதுவாக பெரிய, கூடுதல் சக்திவாய்ந்த கார்களுக்கானதாகும்.
‘ஏ’, ‘பி’ பிரிவுகளை ஒன்றிணைத்தல்
இதன் தொடர்பிலான ஆய்வுக் குழுப் பேச்சுவார்த்தையின்போது ‘ஏ’, ‘பி’ பிரிவுகளை ஒன்றிணைக்கலாம் என்று போக்குவரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் எட்வர்ட் சியா பரிந்துரைத்தார். அதேபோல், சந்தையில் குறைந்த மதிப்புகொண்ட வாகனங்களுக்கு விலைக் கழிவு வழங்கலாம் என்றும் அதிக மதிப்புள்ளவற்றுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
தற்போதைய நிலவரப்படி ‘ஏ’ பிரிவு 1,600 சிசி மற்றும் 130 பிஎச்பி வரையிலான கொள்ளளவைக் கொண்ட சிறிய கார்களுக்கானது. அதிகபட்சமாக 110 கிலோவாட் கொள்ளளவைக் கொண்ட மின்சார வாகனங்களும் அதில் இடம்பெறும்.
‘பி’ பிரிவு, 1,600 சிசி மற்றும் 130 பிஎச்பி கொள்ளளவைத் தாண்டும் பெரிய கார்களுக்கும் 110 கிலோவாட்டைத் தாண்டும் மின்சார வாகனங்களுக்குமானது.
கடந்த புதன்கிழமை (ஜூலை 22) நடந்த ஆக அண்மைய சிஓஇ ஏலக் குத்தகை நடவடிக்கையின்போது ‘ஏ’ பிரிவுக்கான கட்டணம் 126,000 வெள்ளியில் முடிந்தது. ‘பி’ பிரிவுக்கு 129,890 வெள்ளி பதிவானது.

