வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மறுவிற்பனை விலைகள் இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 0.1 விழுக்காடு குறைந்தன. கடந்த ஏழாண்டுகளில் பதிவான முதல் இறக்கம் இது.
2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தக் குறைவான விலை நிலவரம் தெரியவந்தது.
அதுகுறித்து வீவக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) காலை அறிக்கை வெளியிட்டது.
தொடர்ச்சியாக கடந்த ஐந்து காலாண்டுகளில் விலைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இன்றி, மெதுவான வளர்ச்சி பதிவானதாக அது அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட முன்னோடி மதிப்பீடுகளிலும் 0.1 விழுக்காடு குறைவான விலைகள் இடம்பெற்றிருந்தன.
2026 ஜூன் மாதம் 6,900 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு விடப்படும். அங் மோ கியோ, பீஷான், புக்கிட் மேரா, செம்பவாங் மற்றும் உட்லண்ட்ஸ் வட்டாரங்களில் அதற்கான திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

