மலேசியாவில் கடத்தப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் மீட்பு, சந்தேகநபர் சுட்டுக்கொலை

மலேசியாவில் கடத்தப்பட்ட 72 வயது சிங்கப்பூர் முதியவர் மீட்பு, சந்தேகநபர் சுட்டுக்கொலை

2 mins read
காவல்துறை விரைந்து நடவடிக்கை
4248f444-3840-478f-bd7d-a2a64f01b814
ஒரு நீளமான வெட்டுக்கத்தியுடன் இரண்டு கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மலேசியக் காவல்துறை குறிப்பிட்டது. - படம்: அரச மலேசிய காவல்துறை
multi-img1 of 2
Google News Preferred Icon

மலேசியாவின் கெடா மாநிலத்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த 72 வயது சிங்கப்பூர் முதியவர் மலேசியக் காவல்துறையினரின் விரைவான நடவடிக்கையால் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டார்.

தற்போது அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அவருக்கு உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மீட்பு நடவடிக்கையின்போது, கடத்தல்காரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மலேசியக் காவல்துறையின் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 26ஆம் தேதி மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்ட அந்த முதியவர், ஆகஸ்ட் 4ஆம் தேதி தனது குடும்பத்தினருக்கு ஒலிப்பதிவுச் செய்தி ஒன்றை அனுப்பினார்.

அதில், தாம் கடத்தப்பட்டுள்ளதாகவும், $1 மில்லியன் பிணைத்தொகை வழங்கினால் மட்டுமே தம்மை விடுவிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அவரது குடும்பத்தினர் உடனடியாகச் சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

சிங்கப்பூர் காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, மலேசியக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இருவர் மீட்பு, ஆயுதங்கள் கைப்பற்றல்

ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 8.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 72 வயது சிங்கப்பூர் முதியவருடன் 30 வயதுடைய சீனப் பெண் ஒருவரும் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து இரு தானியங்கித் துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர், ஒரு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலதிக விசாரணையில், இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 20 முதல் 40 வயதுக்குட்பட்ட மலேசியர் ஒருவரும் ஐந்து சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கோலாலம்பூரில் நடந்த மேலும் இரு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.

சந்தேகநபர்கள் டெலிகிராம், வீசாட், பாடூ போன்ற சமூக ஊடகங்கள் மூலம் போலியான நட்பை ஏற்படுத்தி, சுற்றுலா அல்லது வேலைவாய்ப்பு எனக் கூறி ஏமாந்தோரை நேரில் வரவழைத்துக் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இரு நாட்டு காவல்துறையின் வலுவான கூட்டுறவை சிங்கப்பூர் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஜூலியஸ் லிம் பாராட்டியுள்ளார். எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று அவர் குறிப்பிட்டார்.

இணைய வழியில் அறிமுகம் ஆனவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், தெரியாவர்களை நேரில் சந்திக்கவோ அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லவோ வேண்டாம் என்றும் காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாகடத்தல்சிங்கப்பூரர்முதியவர்