மின்வாகனங்களை மறுவிற்பனை செய்வது சிரமம்: முகவர்கள் கருத்து

2 mins read
a4b8c865-332b-49ef-9d70-f47dd22a1484
‘இயுரோ பெர்ஃபார்மன்ஸ் ஏசியா’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்சன் லீ, மறுவிற்பனை மின்வாகனங்களுடன் நிற்கிறார். - படம்: சிஎன்ஏ

சிங்கப்பூரில் மின்வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. புதிய கார்கள் விற்பனையில் அவை 53 விழுக்காடு இடம்பிடித்துள்ளன என்று கடந்த அக்டோபர் மாத புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இருப்பினும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட மின்வாகனங்களை மக்களிடையே மீண்டும் விற்பனை செய்வது எளிதல்ல என்று வாகன மறுவிற்பனை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வழக்கமான பெட்ரோல் வாகனங்களை விட மின்வாகனங்களின் மதிப்பு சந்தையில் குறைவது அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

ஏறத்தாழ மூன்று வாரங்களில் பெட்ரோல் வாகனங்களை மறுவிற்பனை செய்துவிடலாம். ஆனால் மின்வாகனங்களை மீண்டும் விற்க ஆறு மாதங்கள் கூட ஆகலாம்.

அங் மோ கியோவில் உள்ள ‘இயுரோ பெர்ஃபார்மன்ஸ் ஏசியா’ நிறுவன காட்சியகத்தில் மறுவிற்பனைக்கு இருக்கும் 90 வாகனங்களில் 10 விழுக்காடு மட்டுமே மின்வாகனங்கள் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்சன் லீ தெரிவித்தார்.

மின்வாகனங்களின் மறுவிற்பனை மதிப்பு தற்போதைய நிலையில் மிகவும் குறைவு என்றார் அவர். அதனால் அந்நிறுவனம் அவற்றை கவனமாக தேர்ந்தெடுத்து மறுவிற்பனைக்கு விட வேண்டியுள்ளது. பலமுயற்சிகளை மேற்கொண்டபோதும் அவரது நிறுவனத்திடம் ஓர் ஆண்டுக்குமேல் விற்கப்படாத மின்வாகனம் ஒன்று உள்ளதை அவர் சுட்டினார்.

“நான் பொதுவாக மின்வாகனங்களை ஏற்பதில்லை. அவற்றை விற்பது மிகக் கடினமாக உள்ளது. அவற்றுக்கான தேவை மக்களிடையே இல்லை. பல முகவர்கள் அவற்றைத் தவிர்க்கின்றனர்,” என்று திரு அன்சன் லீ கூறினார்.

மறுவிற்பனைச் சந்தையில், விலை சற்று குறைவாக உள்ளதால் நன்மதிப்பு பெற்ற ஒரே மின்வாகனம், சீனாவின் தயாரிப்பான ‘பிவய்டி’ (BYD) என்பதை அவர் குறிப்பிட்டார்.

வாகனங்கள் ஆண்டுக்கு ஆண்டு மதிப்பிறக்கம் அடைவதும் மறுவிற்பனையை பெரிதும் பாதிக்கும். வழக்கமான வாகனங்கள் 10 விழுக்காட்டு மதிப்பை இழக்கும் நிலையில், மின்வாகனங்களின் மதிப்பு 40 விழுக்காடு வரை குறைகின்றன.

மக்கள் புத்தம்புதிய அம்சங்களுடன் அறிமுகமாகும் மின்வாகனங்களை விரும்பி வாங்கும்போது, பழைய மின்வாகனங்கள் சந்தையில் நிரம்பிவிடுகின்றன.

மறுவிற்பனை செய்யப்பட்ட மின்வாகனங்கள் பழுதடையும்போது சீர் செய்ய உபரி பாகங்கள் கிடைப்பதும் எளிதல்ல என்பதாலும் அவற்றின் விற்பனை தேக்கம் அடைகின்றது.

குறிப்புச் சொற்கள்