கழிவுகளை அகற்றும் சேவைக்காக ஜூலை 1 முதல் குடியிருப்பாளர்கள் அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தரையுடன் தொடர்பில்லாத தனியார் வீடுகள் ஆகியவற்றுக்கான மாதாந்தரக் கட்டணம் $10.20லிருந்து 44 காசுகள் அதிகரித்து $10.64ஆக உயரும் என்று தேசியச் சுற்றுச்சூழல் அமைப்பு, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகள், கூட்டுரிமை வீடுகள், மின்தூக்கி வசதியில்லாத வீடுகள், டியூப்ளெக்ஸ் வீடுகள் ஆகியவை தரையுடன் தொடர்பில்லாத தனியார் வீடுகளில் உள்ளடங்கும்.
இதற்கிடையே, தரையுடன் தொடர்புடைய வீடுகளில் வசிப்போருக்கான மாதாந்தரக் கட்டணம் $34லிருந்து $1.50 அதிகரித்து $35.50ஆக உயரும். இரண்டு கட்டணங்களிலும் 9 விழுக்காடு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அடங்கும்.
திருத்தப்பட்ட இந்தக் கட்டணங்கள், சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கழிவு மேலாண்மை அமைப்பு நீடித்துச் செயல்படுவதை உறுதிசெய்யும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு கூறியது.
பொதுக் கழிவுப் பொருள்களை அகற்றும் நிறுவனங்களின் செயலாக்க, மனிதவளச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டணங்களைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது இருப்பதாக அமைப்பு கூறியது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான கழிவகற்றல் கட்டணத்தைக் காலாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் ‘யூ-சேவ்’ கழிவுத்தொகையின் மூலம் ஈடுசெய்ய முடியும்.
2026 நிதியாண்டிற்கான கழிவுத்தொகை ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களிலும், பின்னர் 2027 ஜனவரியிலும் வரவு வைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தகுதியுள்ள குடும்பங்களின் ‘எஸ்பி சர்வீசஸ்’ (SP Services) பயன்பாட்டுக் கணக்குகளில் நேரடியாக இந்தக் கழிவுத்தொகை செலுத்தப்படும்.

