தெம்பனிஸ் பேருந்துச் சேவைகள் குறித்து பயணிகள் அதிருப்தி: பே யாம் கெங்

தெம்பனிஸ் பேருந்துச் சேவைகள் குறித்து பயணிகள் அதிருப்தி: பே யாம் கெங்

2 mins read
fb08a2fa-514d-40a9-9831-80e72915c4d5
தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங், ‘கோ அஹெட் சிங்கப்பூர்’ நிர்வாகத்துடன் பேசினார். - படம்: பே யாம் கெங்/ஃபேஸ்புக்

தெம்பனிஸ் வட்டாரத்தின் பேருந்துச் சேவைகளுக்கான பொறுப்பை ‘கோ அஹெட் சிங்கப்பூர்’ நிறுவனம் ஏற்றுக்கொண்டதிலிருந்து கூடுதல் நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் புகார் அளித்துள்ளனர்.

அந்நிறுவனத்தின்கீழ் சேவை வழங்கும் பேருந்துகளின் நம்பகத்தன்மையும் குறைந்துள்ளதாகத் தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) பதிவிட்டார்.

“பல தெம்பனிஸ் குடியிருப்பாளர்கள், தங்கள் பேருந்து எப்போதுவரும் என்று தெரியாமல் கூடுதல் நேரம் காத்திருப்பதாகப் பகிர்ந்துகொண்டனர். அத்துடன், ஒரே சேவையை வழங்கும் இரண்டு பேருந்துகள் ஒரே நேரத்தில் வரும் தருணங்கள் குறித்தும் அவர்கள் தெரிவித்தனர்,” என்றார் திரு பே.

பயணிகளின் எரிச்சலைப் புரிந்துகொள்ள முடிவதாகக் குறிப்பிட்ட அவர், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் காலகட்டத்துக்குப்பின் பேருந்துச் சேவைகளின் தரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“பேருந்துச் சேவைகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை வேறொரு நிறுவனத்துக்குக் கொடுப்பது குறித்து அரசாங்கம் யோசிக்க நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்,” என்று திரு பே சொன்னார்.

இதற்குமுன், சேவை வழங்கிய எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்துகள் சரியான நேரத்தில் வந்ததால் காலை உணவை உட்கொள்வதற்கும் நேரம் கிடைத்ததாக வேறு சில பயணிகள் திரு பேயின் பதிவின்கீழ் கருத்துத் தெரிவித்தனர்.

‘கோ அஹெட் சிங்கப்பூர்’ நிறுவனத்தின்கீழ் இயங்கும் பேருந்துகளில் முதலாவதாக வருபவை கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் தாமதமாக வருவதாகச் சிலர் கூறினர்.

அதன் காரணமாக, போக்குவரத்து உச்சநேரத்தில் பிள்ளைகளைக் கூட்டிச் செல்லும் பெற்றோர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குடியிருப்பாளர்களின் கவலைகளை ‘கோ அஹெட் சிங்கப்பூர்’ நிர்வாகிகளிடம் நேரடியாகப் பகிர்ந்துகொண்டதையும் திரு பே குறிப்பிட்டார்.

தனது பேருந்து ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் புதிய ஓட்டுநர்கள் என்று விளக்கமளித்த ‘கோ அஹெட் சிங்கப்பூர்’, பாதைகளுக்குப் பழகிக்கொள்ள அவகாசம் தேவைப்படுவதாகக் கூறியது.

குறிப்புச் சொற்கள்
சேவைபேருந்துதெம்பனிஸ்